769 கிலோ கொக்கேன் அழிப்பு! தேடுதல் வேட்டை தொடரும் என ஜனாதிபதி அறிவிப்பு!!

நாட்டின் பாதுகாப்புத் துறையினால் கைப்பற்றப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்ட 769 கிலோகிராம் கொக்கேன் போதைப்பொருளை பகிரங்கமாக அழிக்கும் நடவடிக்கை ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவின் கண்காணிப்பின் கீழ் இன்று (01) முற்பகல் களனி மகுருவெலயில் உள்ள சுரவீர களஞ்சியத் தொகுதியில் இடம்பெற்றது.

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் தலைமையில் சர்வதேச நியமங்களுக்கேற்ப இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியினதும் கல்கிசை நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியினதும் முழுமையான மேற்பார்வையின் கீழ் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம், அபாயகர ஔடத கட்டுப்பாட்டுச் சபை மற்றும் இரசாயனப் பகுப்பாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்வை நேரடியாக பொதுமக்கள் பார்ப்பதற்கான சந்தர்ப்பமும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

உரிய பரிசோதனைகளுக்குப் பின்னர் போதைப்பொருட்கள், இரசாயன பதார்த்தங்கள் அடங்கிய கொள்கலன்களில் இட்டு கரைத்து அழிக்கப்பட்டதுடன், அவ்வாறு இரசாயன திரவத்தில் கரைக்கப்பட்ட போதைப்பொருள் கொள்கலன் பொலிஸ் பாதுகாப்புடன் இன்றைய தினம் புத்தளத்தில் உள்ள சீமெந்து கூட்டுத்தாபன வளாகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அதிக வெப்பம் கொண்ட உளைகளில் இட்டு ஆவியாக்கப்பட்டது.

பொலிசாரினால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுக்கு என்ன நடக்கின்றது என்று மக்கள் மத்தியில் இருந்து வந்த பிரச்சினைக்கு தீர்வாகவே ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இன்றைய தினம் பகிரங்கமாக அழிக்கப்பட்ட போதைப்பொருட்கள், இந்நாட்டில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களாகும் என்பதுடன், 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் திகதி ஒருகொடவத்தையில் கண்டுபிடிக்கப்பட்ட 301 கிலோ 235 கிராம்,

2016ஆம் ஆண்டு நவம்பர் 09ஆம் திகதி களனி பெத்தியாகொட பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 31 கிலோ 844 கிராம் கொக்கேனும் 2016ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் திகதி ஒருகொடவத்தை சுங்க கொள்கலன் தளத்தில் கைப்பற்றப்பட்ட கொக்கேன் 219 கிலோ 950 கிராம், மற்றும் 2018 ஜூன் 19ஆம் திகதி ரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்தில் கைப்பற்றப்பட்ட 216 கிலோ 435 கிராம் கொக்கேன் ஆகியவையே இவ்வாறு அழிக்கப்பட்டன.

இந்த நிகழ்வை பார்வையிட்டதன் பின்னர் கருத்து தெரிவித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன,

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை முற்றாக ஒழிக்கும் நிகழ்ச்சித்திட்டம் தற்போது வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.

நாட்டுக்கு கொண்டுவரப்படும் சட்டவிரோத போதைப்பொருட்களை கண்டறிவதற்கு உலகில் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் பயன்படுத்தப்படும் நவீன தொழிநுட்ப உபகரணங்களை அடுத்த மாதம் இலங்கைக்கு கொண்டு வர தான் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி  குறிப்பிட்டார்.

மேலும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரணதண்டனை வழங்குவதும் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அமைச்சர் தலதா அத்துகோரல, இராஜாங்க அமைச்சர்கள் அஜித் மான்னப்பெரும, ரஞ்சன் ராமநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன, சத்துர சேனாரத்ன, மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோரும் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பின் முக்கியஸ்தர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *