விக்கி சொல்வது போல் செய்தால் இலங்கை அரசு பாதுகாக்கப்படும்! – மாவை தெரிவிப்பு

“ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கலப்பு நீதிமன்றப் பொறிமுறை விடயத்தில் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சொல்வது போன்று செய்தால் மனித உரிமைகள் சபையின் அவதானிப்பில் இருந்து இலங்கை அரசை விடுவித்து பாதுகாப்பதாகவே அது அமையும்.”

– இவ்வாறு தெரிவித்தார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா.

கலப்புப் பொறிமுறை தவறு என்று தொடர்ச்சியாகக் கூறி வந்த விக்னேஸ்வரன், இப்போது அந்தக் கலப்புப் பொறிமுறை குறித்து கூறுவது ஏன்? என்றும் மாவை எம்.பி. கேள்வி எழுப்பினார்.

யாழ். மார்ட்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜெனிவாத் தீர்மானத்தில் கலப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஜனாதிபதி அதனைத் தான் ஏற்கவில்லை என்றும், அந்தத் தீர்மானத்துக்கு அரசு இணை அனுசரணை வழங்கியது தனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார். அதேபோன்று அமைச்சர் திலக் மாரப்னவும் அந்தக் கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை ஏற்கவில்லை என்றும், அது இலங்கை அரசமைப்புச் சட்டத்திற்கு முரண் என்றும் கூறியிருக்கின்றார்.

இவ்வாறானதொரு நிலையில் தீர்மானம் தொடர்பில் எமது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அரசமைப்பில் அதற்கு இடமுண்டு என்றும், அரசு ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் அத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் ஓர் உரையையும் ஆற்றியிருக்கின்றார்.

அந்தத் தீர்மானத்தையொட்டி பலவிதமான அறிக்கைகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதேநேரம் எங்கள் தரப்பிலும் சிலர் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கக்கூடாது என்று குறிப்பிட்டனர். இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்றும், இந்தத் தீர்மானம் தேவையற்றது – அதனால் பாதிப்பு என்றும் கூறியிருக்கின்றனர்.

இந்தத் தீர்மானம் இல்லாமல்விட்டால் இலங்கை அரசு மனித உரிமைகள் சபையில் இருந்து விடுவிக்கப்படும் நிலை இருந்தது. ஆகையால் இலங்கை அரசு அதிலிருந்து வெளியேறுவதை நாங்கள் விரும்பவில்லை. ஆகையாலேயே இந்தத் தீர்மானத்தை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோருகின்றோம். இதனடிப்படையிலே சர்வதேச நாடுகளுடனும் நாங்கள் பேசி வருகின்றோம்.

அதனூடாக இலங்கை அரசுக்கு அழுத்தத்தைக் கொடுத்து தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளில் நாம் ஈடுபட்டு வருகின்றோம்.

கலப்பு நீதிமன்றத்தை நடைமுறைப்படுத்தமாட்டோம் என அரசு கூறி வருவதால் தீர்மானம் தொடர்பில் குழப்பம் உள்ளது. ஆனாலும், இலங்கை அரசு இணை அனுசரணையாக வழங்கியுள்ளதன் அடிப்படையில் அதனை நிறைவேற்றியாக வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு ஆகும்.

எமது நிலைப்பாட்டின் அடிப்படையில் நாம் எம்மாலான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றோம். ஆனாலும், இந்தத் தீர்மானத்தை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தாவிட்டால் சர்வதேச சமூகம் இலங்கை மீது கடுமையான அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

இந்தத் தீர்மானத்தில் எமது தரப்பிலும் குழப்பங்கள் – மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. அதில் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் மற்றும் கலப்புப் பொறிமுறை தொடர்பிலும் பேசப்படுகின்றது. இந்நிலையில், தற்போது முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் கலப்பு நீதிமன்றப் பொறிமுறை தொடர்பில் பேசியிருக்கின்றார். அவர் ஒரு நீதியரசர் என்ற முறையில் சர்வதேச சட்டங்களில் அல்லது நடைமுறைகளில் அனுபவப்பட்டவர் என்று எண்ணவில்லை.

எங்களைப் பொறுத்தவரை இலங்கை அரசை என்ன காரணம் கொண்டும் போர்க்குற்ற விசாரணைகள், உண்மையைக் கண்டறிதல், பொறுப்புக்கூறல் ஆகிய தீர்மானங்களின் அடித்தளத்திலிருந்து விடுவிப்பதற்கு நாங்கள் ஒரு காலமும் சந்தர்ப்பம் கொடுக்கக் கூடாது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *