பெருந்தோட்டப் பகுதிகளில் அரச போக்குவரத்து ‘சூனியம்’ – குறைகளை பட்டியலிட்டுக்காட்டி சபையில் வேலுகுமார் எம்.பி. உரை!

”பெருந் தோட்டப்பகுதிகளில் இலங்கைப் போக்குவரத்து சபையின் பஸ் சேவை முறையாக முன்னெடுக்கப்படுவதில்லை. அது இன்னமும் கீழ் மட்டத்திலேயே இருந்து வருகின்றது.

அத்துடன், “பாவனைக்கு உகந்ததல்ல” என ஒதுக்கப்படும் பஸ்களே சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன. எனவே, இவை தொடர்பில் கவனம் செலுத்தி – விசாரணை நடத்தி உரிய தீர்வை வழங்குவதற்கு போக்குவரத்து அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.’’

-இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான வேலுகுமார் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ அத்தியாவசிய சேவையாகக் கருதப்படும் போக்குவரத்து சேவையானது இலங்கையிலும் காலத்திற்கேற்ப வளர்ச்சிகண்டுவருகின்றது. இதன்படி இலங்கை போக்குவரத்து சபையின், பஸ் சேவை நகரப்பகுதிகளில் உரியவகையில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

ஆனால், பெருந்தோட்டப்பகுதிகளில் அதன் சேவையானது உரிய வகையில் இடம்பெறுவதில்லை. பின்தங்கிய நிலையிலுள்ள சில தோட்டங்களுக்கு சி.டி.பி. பஸ்கள் சேவையில் ஈடுபடுவதில்லை. இதனால், அங்கு வாழ்பவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

குறிப்பாக பெரும்பாலான தோட்டப்பகுதிகளில் 5ஆம் ஆண்டுவரையே கல்விசேவை இடம்பெறும். அதன்பிறகு அருகிலுள்ள நகரப்பாடசாலையை நோக்கியே மாணவர்கள் வரவேண்டும். போக்குவரத்துக்காக சி.டி.பி. பஸ்களை நம்பியே இருக்கின்றனர்.
ஆனால், என்ன நடக்கின்றது? பாவனைக்கு உகந்ததல்ல என ஒதுக்கப்படும் பஸ்களே சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன.

முறையானநேர சூசி இல்லை. பாடசாலை முடிவதற்கு முன்னரே சி.டி.பி. பஸ் புறப்பட்டுவருகின்றது. இதனால், அடுத்த பஸ்ஸ{க்காக பலமணிநேரம் காத்திருக்கவேண்டிய நிலை ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஏற்படுகின்றது. இதை அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டினால், ஒரு வாரத்துக்கு சிறந்த சேவை நடைபெறும். அதன்பின்னர் பழையே நிலைமையே தொடரும்.

அதுமட்டுமல்ல இரண்டு மாவட்டங்களுடன் தொடர்புடைய போக்குவரத்து சேவையும் மோசமான நிலையிலேயே உள்ளது.

நுவரெலியா மாவட்டத்துடன் தொடர்புடைய முல்லோயா பகுதியிலிருந்து கண்டிமாவட்டத்துக்குட்பட்ட தெல்தொட்டை பகுதிக்குவரும் மாணவர்களும், கேகாலை மாவட்டத்திலிருந்து நாவலப்பிட்டியவுக்குவரும் மாணவர்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர்.

முன்னர் போக்குவரத்து சேவை இடம்பெற்ற பகுதிகளுக்கு தற்போது இடம்பெறுவதில்லை. எனவே, இது உட்பட பெருந்தோட்டப்பகுதிகளில் அரச போக்குவரத்து சேவைக்கு தடையாகவுள்ள காரணிகளை விசாரணைமூலம் கண்டறிந்து, உரிய தீர்வை வழங்க போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டும். வீதி அபிவிருத்தி அமைச்சையும் இணைத்துக்கொண்டு கூட்டு நடவடிக்கை ஊடாக விரைவில் அப்பகுதி மக்களுக்கான வழி பிறக்கவேண்டும்.

அதேவேளை, இலங்கையில் இரண்டாவது நகரமாகக் கருதப்படும் கண்டிமாவட்டத்துக்கு உள்ளுர் விமான சேவையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. காணியும் ஒதுக்கப்பட்டது. அதற்கான நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. எனவே, இது குறித்தும் கவனம் செலுத்தி, நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *