‘சர்வதேச விசாரணை’ ஊடாகவே உண்மையைக் கண்டறியமுடியும்! – போர்க்குற்றச்சாட்டு குறித்து சுமந்திரன் எம்.பி. கருத்து

இறுதிப் போரின்போது, இரண்டு தரப்பினரும் குற்றமிழைத்துள்ளனர் எனக் குற்றச்சாட்டப்படும் காரணத்தால், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை அமைக்கவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தினார்.

இந்த விடயத்தில் உண்மை நிலைவரம் சர்வதேச விசாரணையின் ஊடாகவே வெளிவரும் என்றும் அவர் கூறினார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (29) நடைபெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இரண்டு தரப்பினரும் குற்றமிழைத்துள்ள நிலையில், ஏன் ஒரு தரப்பினர் மீது மட்டும் குற்றம் சுமத்தவேண்டும் என்று கேள்விகள் எழுந்துள்ளன. அது சரியானது, நான் இதனை ஏற்றுக்கொள்கிறேன்.

ஒரு அறிக்கையில், இராணுவத்துக்கு எதிராக 5 குற்றங்களும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக 6 குற்றங்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அதாவது, சர்வதேச போர் விதிகளை மீறியதாகவே இந்தக் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த விடயத்தில் விடுதலைப்புலிகளின் ஒரு சில தலைவர்களது பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதனாலேயே, நாம் உண்மை அறியும் ஆணைக்குழுவொன்றை அமைக்கவேண்டும் என வலியுறுத்தி வருகின்றோம்.

இதன் ஊடாக உண்மை வெளிவந்தால் பாதிக்கப்பட்ட இரண்டு தரப்பினரும், அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாகத் தீர்வொன்றை மேற்கொள்ள முடியும்.

இந்தச் குற்றச்சாட்டானது இலங்கை அரசுக்கு எதிரானது என தமிழர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது அப்படியானதல்ல. உண்மை வெளிவந்தால் மட்டுமே யார் குற்றவாளிகள் என்பதை அறிந்துகொள்ள முடியுமாக இருக்கும். இதனை நாம் வடக்கிலும் தெரிவித்துள்ளோம்.

போர்க் காலத்தின்போது பல்வேறு மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளமை உண்மையான ஒரு விடயமே. இறுதிப் போரின்போது, 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் எனக் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது குறித்து இதுவரை எந்தவொரு விசாரணைகளும் இடம்பெறவில்லை. 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக மட்டும்தான் தற்போது விசாரணைகள் நடக்கின்றன.

இந்தப் 11 பேரும் விடுதலைபுலி உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினால்தான் இந்த விசாரணை நடக்கிறது எனச் சிலர் தெரிவிக்கின்றனர்.

அப்படியென்றால், சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் விடயத்திற்கு தீர்வென்ன? இதற்காகத்தான் நாம் சர்வதேச விசாரணையைக் கோரி நிற்கின்றோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *