வீடமைப்புத் திட்டத்தைக் குழப்ப முயற்சி; பிரதமரின் தலையீட்டால் இடைநிறுத்தம்!

நீண்ட இழுபறியின் பின்னர் முன்னெடுக்கப்பட்ட வடக்கு – கிழக்கு வீடமைப்புத் திட்டத்தைக் குழப்புவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலையீட்டை அடுத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கூட்டு அரசு ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான வீடமைப்புத் திட்டம் தொடர்பில் தொடர்ச்சியாகப் பேசப்பட்டு வருகின்றது. ஆரம்பத்தில் பொருத்து வீடு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது. கல் வீடு அமைக்கும் யோசனை 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முன்வைக்கப்பட்டிருந்தது. அதன் பின்னரும் இழுபறி நிலை நீடித்திருந்தது. ஒருவாறாக கடந்த ஜனவரி மாதம் 10 ஆயிரம் கல் வீடுகள் அமைக்கும் யோசனை நடைமுறைக்கு வந்தது. அதிலும் 4ஆயிரத்து 750 வீடுகளே முதலில் கட்டுவதற்கு அடிக்கல் நடப்பட்டன.

இந்த நிலையில் எஞ்சிய 5 ஆயிரம் வீடுகளை, வடக்கு அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சிடமிருந்து பிடுங்கி எடுத்து, அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் வீடமைப்பு அதிகார சபை ஊடாக முன்னெடுக்க அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிதி அமைச்சும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கியிருந்தது.

இந்த விவகாரம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்கு, அவரது ஆலோசகர்களில் ஒருவரால் கொண்டு செல்லப்பட்டுள்ளது. வடக்கு – கிழக்கு வீடமைப்புத் திட்டத்தை சஜித் பிரேமதாஸவின் வீடமைப்பு அதிகார சபை ஊடாக முன்னெடுக்கத் தேவையில்லை என்றும், தனது வடக்கு அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக முன்னெடுக்குமாறும் பணித்துள்ளார்.

மேலும் இதுவரை ஆரம்பிக்கப்படாதுள்ள எஞ்சிய வீடுகளுக்கான அடிக்கல் நடும் பணிகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார் எனத் தெரியவருகின்றது.

(‘புதுச்சுடர்’ வார இதழ் – 2019 மார்ச் 30 – ஏப்ரல் 12)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *