28 சிங்கள நகரங்களில் ரிஷாத்துக்கு எதிராக இனவாதிகள் கொந்தளிப்பு!

வில்பத்துக் காட்டை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அழிக்கிறார் என்று குற்றம் சாட்டியும், வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பல இனவாதக் கோஷங்களை முன்வைத்து இன்று (30) நாடு பூராகவும் உள்ள 28 பிரதான சிங்கள நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் உருவப் பொம்மைகள், இனவாதக் கருத்துக்களைக் கொண்ட பதாதைகள் மற்றும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றப் புகைப்படங்களை ஏந்தியவாறு இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னனெடுக்கப்பட்டன.

‘இலங்கையைப் பாதுகாப்போம்’ அமைப்பின் தலைவர் பாஹியங்கல ஆனந்த சாகர தேரரின் நெறிப்படுத்தலின் கீழ் இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டங்களில் பல்கலைக்கழக மாணவர்களே பெருமளவில் பங்குகொண்டிருந்தனர்.

கடந்த காலங்களில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களின்போது இனவாத பௌத்த தேரர்களும், சிங்கள இனவாதிகளுமே பங்குகொண்டிருந்தனர். ஆனால், இன்றைய ஆர்ப்பாட்டங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் மாத்திரமே பங்குகொண்டிருந்தமை அதிர்ச்சிக்குரிய விடயமாக பார்க்கப்படுகின்றது.

28 நகரங்களில் நடைபெற்ற மேற்படி ஆர்ப்பாட்டங்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற சிங்கள மக்களைக் கொண்ட நகரங்களிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த ஆர்ப்பாட்டங்கள் ஒட்டுமொத்த சிங்கள மக்கள் மத்தியில் வடக்கு முஸ்லிம்களையும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனையும் தவறாக சித்தரிக்கும் நோக்கத்திலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு என்றுமில்லாதவாறு சிங்கள ஊடகங்களும் சிங்கள சமூக வலைத்தளங்களும் அதிக முக்கியத்துவத்தை வழங்கியிருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *