ஏப்ரல் 5 இல் அரசுக்கு பலப்பரீட்சை! – கைகொடுக்கின்றது கூட்டமைப்பு; ‘பல்டி’ அடிக்குமா சு.க.?

 

* ஆளுங்கட்சி எம்.பிக்கள் வெளிநாடு பறக்கத் தடை

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம்மீது எதிர்வரும் 5ஆம் திகதி இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவிருப்பதால் சவாலின்றி ‘பட்ஜட்’டை நிறைவேற்றிவிடலாம் என ஆளுந்தரப்பு நம்பிக்கை வெளியிட்டிருந்தாலும், அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்குரிய நடவடிக்கையில் மஹிந்த அணி இறங்கியுள்ளது.

எனவே, ஏப்ரல் 5 ஆம் திகதி கட்டாயம் சபைக்கு வருமாறு ஆளுங்கட்சி எம்.பிக்களுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதுடன், வெளிநாடு பறக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அதிருப்தி நிலையிலுள்ள ஐ.தே.கவின் பின்வரிசை எம்.பிக்களைத் திருப்திப்படுத்தும் முயற்சியில் பிரதமர் இறங்கியுள்ளார். கம்பெரலிய (ஊரெழுச்சி) வேலைத்திட்டத்தின்கீழ் இவர்களுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்படவுள்ளது.

அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணி உறுப்பினர்களும், ஜே.வி.பியும் பட்ஜட்டுக்கு எதிராக வாக்களிக்கவுள்ளனர்.

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது நடுநிலை வகித்த ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இறுதி வாக்கெடுப்பின்போது எத்தகைய முடிவை எடுக்கும் என்பது குறித்து இன்னும் உத்தியோகபூர்வத் தகவல்கள் வெளியாகவில்லை.

எதிர்த்து வாக்களிக்கப்படும் என சு.க. உறுப்பினர்கள் சிலர் அரசியல் மேடைகளில் முழக்கமிட்டிருந்தாலும் ஜனாதிபதியுடன் இவ்வாரம் நடைபெறும் சந்திப்பையடுத்தே இந்த விடயத்தில் இறுதி முடிவெடுக்கப்படவுள்ளது.

2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மார்ச் 5ஆம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

6ஆம் திகதி முதல் 12 ஆம் திகதிவரை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்று, 12ஆம் திகதி மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்துக்கு கடந்த 13ஆம் திகதி முதல் நடைபெற்று வருகின்றது. ஏப்ரல் 5ஆம் திகதிவரை அது தொடரும். 5 ஆம் திகதிமாலை பட்ஜட் மீது இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும்.

ஐக்கிய தேசிய முன்னணி அரசிடம் சாதாரண பெரும்பான்மைகூட இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடனேயே ஆட்சியை முன்னெடுத்து வருகின்றது. 14 எம்.பிக்களின் ஆதரவே பட்ஜட்டுக்கு கிடைக்கும். இந்நிலையில், ஐ.தே.க. தரப்பிலிருந்து 15 எம்.பிக்களை, மஹிந்த அணி வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இருக்கவைத்தால்கூட பட்ஜட்டை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படும். எனவேதான், 5 ஆம் திகதி பலப்பரீட்சையாக கருதப்படுகின்றது.

(‘புதுச்சுடர்’ வார இதழ் – 2019 மார்ச் 30 – ஏப்ரல் 12)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *