வெற்றி பெறும் ஒருவரையே வேட்பாளராக அறிவிப்பேன்! – மஹிந்த திட்டவட்டம்

“ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதைச் சரியான நேரத்தில் அறிவிப்போம். வெற்றி பெறக்கூடிய வேட்பாளராகத்தான் அவர் இருப்பார்.”

– இப்படித் தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை நேற்று சந்தித்துப் பேசியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பொதுத் தேர்தல் ஒன்று வருகின்றது என ஒரு தரப்பு சொல்கிறது, மாகாண சபைத் தேர்தல் ஒன்று வருகிறது என இன்னொரு தரப்பு சொல்கிறது. ஏன் ஜனாதிபதித் தேர்தல் கூட வருவதாகச் சொல்கின்றனர். ஆனால், தேர்தல் தொடர்பில் அப்படியான தகவல் எதுவும் எனக்குத் தெரிந்தவரை இல்லை.

கோட்டாபய ராஜபக்‌ஷ வருவார் எனத் தீர்மானிக்கவில்லை. பஸில் வருவார் என்றனர். கோட்டாபய வருவார் என்றனர். சமல் ராஜபக்‌ஷ வருவார் என்றனர். குடும்பத்தில் ஒவ்வொருவர் தொடர்பிலும் மிகப் பெரிய கருத்துக்கள் பரப்பப்பட்டன. தான் போட்டியிடமாட்டேன் என பஸில் கூறிவிட்டார்.

நான் இன்னும் வெற்றி பெறக்கூடிய ஒருவரைத் தேடிக் கொண்டிருக்கின்றேன். தமது வேட்பாளர் யாரென்பதை ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரைப் பொறுத்துதான், எங்கள் வேட்பாளரைத் தீர்மானிப்போம்” – என்றார்.

கூட்டணி அமைப்பது தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் நடத்தப்படும் பேச்சுக்களின் நிலைமை என்ன என்று ஒரு ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது பதில் வழங்கிய மஹிந்த,

“ஆரம்பத்தில் சில தாமதங்கள் இருந்தாலும் இப்போது இருதரப்பு பேச்சு நல்ல முன்னேற்றத்துடன் நடைபெறுகின்றது” எனக் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *