தாதிமார் பயிற்சித் தரங்களை வளப்படுத்தி சர்வதேச தொழில் வாய்ப்புப் பெற முயற்சி!

“தேசிய பயிலுநர் , கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை (நைற்றா) மூலமாகத் தகுதியான தாதிமார்கள் மற்றும் தாதி உதவியாளர்களை உள்வாங்கி அவர்களுக்குரிய பயிற்சி மற்றும் மொழிவிருத்தி, தொழில் ஆளுமை குறித்த விடயங்களில் கவனம் செலுத்தி சர்வதேச தரத்தில் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்கள் விரைவாக மேற்கொள்ளப்படும்.”

– இவ்வாறு மேற்படி அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

தொழில் வாய்ப்புகளை அதிகரிப்பது தொடர்பாகவும் மருத்துவத்துறையில் தொழில் பயிற்சிகளை அதிகரிக்கச் செய்து சர்வதேச ரீதியில் தொழில் வாய்ப்புகளைப் பெறக்கூடிய மருத்துவ தாதிகளை(நர்ஸ்) மற்றும் உதவித் தாதியர்களை உருவாக்கும் நோக்கிலும் தனியார் வைத்தியசாலைகளான நவலோக, ஹேமாஸ், லேடர்ன்ஸ், டெல்மன், லங்காஹெஸ்பிட்டல் போன்ற வற்றின் ஆகியவற்றின் பணிப்பாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவத்துறைசார் பயிற்சிகளை வழங்கும் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது.

இங்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-

“எமது அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கு கலந்துரையாடப் பட்ட விடயங்கள் மூலமாகக் கடந்த காலங்களில் நைற்றால் மேற் கொள்ளப்பட்டு வந்த மருத்துவ தாதிகளின் பயிற்சிகள் தொடர்பில் கண்டறியப்பட்ட குறைபாடுகள் குறித்து இரண்டு வாரங்களுக்குள் தீர்வு செய்யப்படும் இதற்கான ஒரு குழுவை நாம் அமைத்துள்ளோம். இதன் பின்னர் இந்தப் பயிற்சிகளை வழங்கும் தனியார் மருத்துவ நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்படும்.

குறிப்பாக விரைவில் 900பேருக்குத் தாதிகள் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்காகத் தனியார் வைத்தியசாலை நிறுவனம் முன்வந்திருப்பது பாராட் டுக்குரியது. இதனுடாகத் தனியார் வைத்தியசாலைகளில் மட்டுமின்றி முதியோர் இல்லங்களில் நிலவும் தாதியர் மற்றும் உதவித் தாதியர் வெற்றிடங்களை நிரப்ப முடியும்.

குறிப்பாக ஆங்கில மொழிப் பயிற்சியின் அவசியம் குறித்து இங்கு பிரஸ்தாபிக்கப்பட்டது. இதனைச் சிறப்பாக வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும். தற்சமயம் ஆயிரத்து 200 வெற்றிடங்கள் இருப்பது அறியப்பட்டுள்ளது. இவற்றை துரிதகதியில் நிரப்புவதற்கான புதிய நடவடிக்கையும் எடுக்கப்படும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *