கலப்பு நீதிமன்ற பொறிமுறை நிராகரிப்பு -சபையில் ஜே.வி.பி. வரவேற்பு!

” சர்வதேச நீதிபதிகளையும் உள்ளடக்கிய கலப்பு நீதிமன்ற பொறிமுறை அவசியம் என ஜெனிவாத் தொடரில் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை  இலங்கை அரசு நிராகரித்துள்ளமையானது வரவேற்கக்கூடிய விடயமாகும்.” – என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (26) நடைபெறும் வரவு – செலவுத் திட்டத்தில் வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு,

இலங்கைவாழ் மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும். இதற்கு தேவையான யோசனைகளை முன்வைக்க வேண்டும் என்பதுடன், சர்வதேச மட்டத்தில் தடையாகவுள்ள சட்டத்திட்டங்களையும் அரசு சுட்டிக்காட்ட வேண்டும்.

ஆனால், ஒவ்வொருமுறையும் குற்றவாளிகளாகவே ஜெனிவாத்தொடரில் அரச பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். அங்கு எதாவது கேள்வி எழுப்பட்டால் மட்டுமே பதிலளிக்கின்றனர். இந்நிலைமை மாறவேண்டும்.

தேர்தல் பிரசார களமாக ஜெனிவா

ஜெனிவாக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக இங்கிருந்து பல குழுக்கள் செல்கின்றன. இதில் தமிழ், சிங்கள இனவாதிகளும் உள்ளடங்குகின்றனர். அரசியலில் வங்குரோத்து நிலையை அடைந்துள்ள இவர்கள், ஜெனிவாவை பிரசார களமாகப் பயன்படுத்தி தமது அரசியலை பலப்படுத்துவதற்கு முற்படுகின்றனர்.

பங்குசந்தையில் நிதிமோசடி செய்த, ஆட்களை திரட்டுவதாக வெளிவிவகார அமைச்சிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டவர்கள் எல்லாம் இன்று ஜெனிவாவில் தேசப்பற்றாளர்களாக மாறியுள்ளனர். இது வெட்கப்படவேண்டிய விடயமாகும். ஜெனிவாத் தொடரை காட்டி, பெரும் வியாபாரமே நடக்கின்றது.

உள்ளக நீதிப்பொறிமுறை உரிய வகையில் செயற்படுத்தப்படாததால்தான் , உள்நாட்டு விவகாரத்தில் சர்வதேசம் தலையீடு செய்கின்றது. 11 மாணவர்களை கடத்தி, கப்பம்கோரிய அதிகாரிக்குகூட உயர் பதவி வழங்கப்படுகின்றது. அவருக்கு எதிராக விசாரணை நடந்தால் அதில் அரசியல் தலையீடு இடம்பெறுகின்றது. உள்ளக விசாரணைக்கு கொள்கைரீதியில் இணக்கம் தெரிவித்துவிட்டு, இவ்வாறு நடந்தால் என்ன செய்வது?

அதேவேளை, கலப்பு நீதிமன்ற பொறிமுறை தோல்விகண்ட பொறிமுறையாகும். எனவே, அதை இலங்கை நிராகரித்ததை வரவேற்கின்றோம். உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்குமாறு முன்னரே நாம் கோரிக்கை விடுத்தோம். அதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படவேண்டும்.” என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *