மன்னார் புதைகுழி அகழ்வுப் பணிகள் மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தம்!

மன்னார் சதொச வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை 3 மாதங்களுக்கு இடைநிறுத்த மன்னார் நீதிமன்ற நீதிவான் ரி.சரவணபவராஜா உத்தரவிட்டுள்ளார்.

அகழப்பட்ட எலும்புகள் தொடர்பான தடயவியல், மருத்துவ மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிக்கைகள் சமர்ப்பிக்க 3 மாத அவகாசம் கோரப்பட்டதையடுத்து இந்த உத்தரவை நீதிவான் வழங்கினார்.

மன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் அதனுடன் சம்பந்தப்பட்ட தரப்புகள் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு மன்னார் நீதிவானுடன் உயர்மட்டக் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

அகழ்வுப் பணிக்குப் பொறுப்பான சட்ட மருத்துவ நிபுணர் சமிந்த ராஜபக்ச, தடயவியல் விசாரணையாளர்கள், காணாமற் போனோரின் உறவுகளின் சார்பான சட்டத்தரணிகள் உள்ளிட்டோர் இந்தக் கலந்தாலோசனையில் ஈடுபட்டனர்.

இந்தக் கலந்துரையாடலையடுத்து மனித எலும்புக்கூடுகள் தொடர்பான தடயவியல் விசாரணை, சட்ட மருத்துவ நிபுணத்துவம் உள்ளிட்டவற்றின் அறிக்கைகள் கிடைக்கப்பெறும் போது அடுத்த விசாரணைத் திகதி நீதிமன்றம் தீர்மானிக்கும் எனத் தெரிவித்த நீதிவான், அகழ்வுப் பணிகளை 3 மாதங்களுக்கு இடைநிறுத்த உத்தரவிட்டார். அங்கு மீட்கப்பட்ட தொல்பொருள் சின்னங்களின் அறிக்கை கிடைக்க 3 மாதமாகும் என்பதாலேயே, நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

றேடியோ கார்பன் அறிக்கை, மன்னார் புதைகுழி விடயத்தில், இறுதியானதாக இருக்காது. பார் – கோட் பரிசோதனை உள்ளிட்ட ஏனைய ஆய்வு அறிக்கைகளும், இறுதி முடிவு எடுக்கப்படும்போது, கருத்தில் கொள்ளப்படும் என்று்சட்ட மருத்துவ நிபுணர் சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன், காபன் அறிக்கையை மட்டும் வைத்து மன்னார் மனித புதைகுழியின் காலப்பகுதியை நிர்ணயிக்க முடியாது என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்தார்.

3 மாதங்களுக்கு அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்படுவதையடுத்து, புதைகுழி பகுதியை மண்போட்டு மூடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளைத் தோண்டி எடுக்காமல் அப்படியே விட்டால் அவை சேதமாகி விடும் என்பதாலேயே மண் போட்டு மூடப்படுகிறது.

மன்னார் மனித புதைகுழியில் இதுவரை 343 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. அவற்றில் 330 தோண்டி எடுக்கப்பட்டன. அவற்றில் 30 சிறார்களுடையதாகும்.

இதேவேளை, மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகளின் காபன் பரிசோதனையில் அவை 350 தொடக்கம் 600 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *