‘மலையகத்தில் நானே ராஜா’ – மார்தட்டுகிறார் திகா!

மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் வீடமைப்புத்திட்டம் குறித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போலி பிரசாரம் முன்னெடுத்துவருவதாக அமைச்சர் பழனி திகாம்பரம் குற்றஞ்சாட்டினார்.

” எனது அமைச்சின் கண்காணிப்பின்கீழேயே மலையகத்தில் வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதைமீறு வேறுஎவரும் தலையிடமுடியாது.” என்றும் அமைச்சர் திட்டவட்டமாக அறிவித்தார்.

இந்திய அரசின் 113 மில்லியன் ரூபா  நிதி பங்களிப்புடன் கொத்மலை, எல்பொட தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று ( 24) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு,

”   கறுப்பாகவும், கண்கள் சிவந்த நிலையிலும் நாடாளுமன்றத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் எம்.பியொருவர், அமைச்சர் சஜித் பிரமேதாஸவிடம் சென்று 600 வீடுகளுக்கு கடன் விண்ணப்பங்களை கோரியுள்ளார்.

குறித்த விண்ணப்பங்களை வைத்துக் கொண்டு தோட்டந் தோட்டமாகவும், வீடு, வீடாகவும் சென்று, அரசாங்கம் தனக்கு 600 வீடுகள் கொடுத்துவிட்டது என தம்பட்டமும் அடித்துவருகிறார்.

மலையகத்தில் வீடமைப்பு திட்டத்தை முன்னெடுக்கும் பொறுப்பு – அதிகாரம் எனது அமைச்சுக்கே வழங்கப்பட்டுள்ளது. அதிகார சபையும் எமது வசமே இருக்கின்றது. இதில் வேறு எவரும் தலையிடமுடியாது. அதற்கு இடமளிக்கவும் மாட்டேன். மலையகத்தில் நான் நினைத்தால் மட்டுமே வீடுகளை கட்டலாம்.

எனவே, எவரும் அஞ்சவேண்டியதில்லை. தாத்தா சொன்ன பொய் போதும், அப்பா சொன்ன பொய்களும் போதும், இப்போது பேரன் பொய் சொல்லி, கொள்ளுபேரனும் பொய் சொல்ல வந்துவிட்டார். இவர்களின் கதையை நம்ப வேண்டாம். நான் இருக்கும்வரை பயப்படவேண்டிய தேவையில்லை.” என்றார்.

க.கிஷாந்தன்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *