மன்னார் மனிதப் புதைகுழி ‘கார்பன் அறிக்கை’யில் சகலருக்கும் சந்தேகம்! – சாலிய பீரிஸ் தெரிவிப்பு

மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக தற்போதைய கார்பன் பரிசோதனை அறிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு, காலவரையரையை நிர்ணயம் செய்ய வேண்டிய தேவை இல்லை என்று தெரிவித்தார் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ்.

மேலதிகமான ஆய்வுகளையும் செய்ய முடியும் எனவும் அவர் கூறினார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“மன்னார் நகர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பாகவும், அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகளின் கார்பன் பரிசோதனை அறிக்கை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

மன்னார் மனிதப் புதைகுழியின் மனித எலும்புக்கூடுகளின் கார்பன் பரிசோதனை அறிக்கை, அனைத்து தரப்பினருக்கும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் கார்பன் பரிசோதனைக்கு கொண்டு சென்றுள்ள விதம் தொடர்பில் எமக்கு நம்பிக்கை இருக்கின்றது.

மண் மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட தடயப்பொருள்களின் ஆய்வுகளை உள்ளடக்கி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் ஆய்வு அறிக்கை வந்ததன் பின்னர் அனைத்து அமைப்புகளும் இணைந்து ஒரு பொறுத்தமான முடிவுக்கு வர முடியும்.

அத்துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி த்திட்டங்களை வழங்குவதாக, அரசின் இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் ஒரு கட்டமாக, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாதாந்தம் 6 ஆயிரம் ரூபா வழங்குவதாகத் தெரிவித்தபோதும், குறித்த கருத்து தொடர்பாக பல்வேறு கருத்துகள் சிவில் அமைப்புக்களால் முன்வைக்கப்பட்டுள்ளன.

சில பொது மற்றும் சிவில் அமைப்புகள் குறித்த இழப்பீடுகள் தேவையில்லை எனக் கூறுகின்றன. நீதியே தேவை அந்த அமைப்புகள் தெரிவிக்கின்றன” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *