‘வெளிநாட்டு நீதிபதிகள், கண்காணிப்பு செயலகம் நிராகரிப்பு’ – மாரப்பனவின் ஜெனிவா உரைக்கு பிரதமர் பாராட்டு!

சர்வதேச நீதிபதிகளையும் உள்ளடக்கிய கலப்பு நீதிமன்ற பொறிமுறையை ஜெனிவாத் தொடரில் நிராகரித்ததன்மூலம் இலங்கையின் சுயாதீனத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று ( 22 ) தெரிவித்தார்.

இலங்கையின் முதலாவது பிரதமரான தேசபிதா டி.எஸ்.சேனாநாயக்கவின் 67 ஆவது நினைவஞ்சலிக் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில்  சுதந்திர சதுக்க வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” தேசபிதா டி.எஸ். சேனாநாயக்கவின் கொள்கைவழியில்தான் நாம் பயணிக்கின்றோம் என்பது நேற்றுகூட (21) உறுதிபடுத்தப்பட்டது.

சர்வதேச நீதிபதிகளையும் உள்ளடக்கிய கலப்பு நீதிமன்ற பொறிமுறை அவசியம் என ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் ஜெனிவாத் தொடரில் கோரிக்கை விடுத்திருந்தார். எனினும், இலங்கை ஜனநாயக நாடு. சுயாதீன நீதிமன்ற கட்டமைப்பு இருக்கின்றது என சுட்டிக்காட்டி மேற்படி கோரிக்கையை வெளிவிவகார அமைச்சர் நிராகரித்தார்.

அத்துடன், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் செயலகமொன்றை இலங்கையில் அமைக்கவேண்டியதில்லை. மனித உரிமை ஆணையாளர் எந்நேரத்தில் வேண்டுமானாலும் எமது நாட்டுக்கு வரலாம் என்றும் எமது நாட்டின் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார். இதன்மூலம் இலங்கையின் சுயாதீனத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டது.

அதேவேளை, படையினரை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்ல இடமளிக்கப்படாது. எவராவது தவறிழைத்திருக்கும் பட்சத்தில் உள்நாட்டில் வழக்கு தொடுத்து நடவடிக்கை எடுக்கலாம். எமது அரசு படையினரை தண்டிக்கவில்லை. மாறாக ஐ.நா. அமைதிப்படைக்கே ஆட்களை அனுப்பியுள்ளோம்.” என்றார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *