சுப்பர் ஓவரில் வெற்றியை பறிகொடுத்த இலங்கை!

இலங்கைக்கு எதிரான முதல் சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்கா சுப்பர் ஓவரில் வெற்றிபெற்றது.

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நேற்று இரவு (19) நடைபெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை அணி வழமைபோன்று தடுமாற்றத்துக்குள்ளாகி அடுத்தடுத்து விக்கெட்களை தாரைவார்த்தது.

நிரோஷன் திக்வெல்ல, குசல் மென்டிஸ் ஆகியோர் ஓட்டமின்றி ஆட்டமிழந்தனர்.

புதுமுக வீரரான கமிந்து மென்டிஸ் 29 பந்துகளில் 2 சிக்ஸர்கள், பௌண்டரிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார்.

இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ஓட்டங்களைப் பெற்றது.

வெற்றி இலக்கான 135 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய தென் ஆபிரிக்க அணி, ஆரம்பத்தில் விக்கெட்களை இழந்தபோதிலும் பின்னர் சவாலான நிலைக்கு உயர்ந்தது.

டேவிட் மிலர் 41 ஓட்டங்களையும் ஹீ வேன் டர் டசன் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.

எனினும், அவர்கள் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தவுடன் அடுத்தடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தப்பட தென் ஆபிரிக்கா சிரமத்துக்குள்ளானது.

இறுதி ஓவரில் தென் ஆபிரிக்கா வெற்றிபெற 5 ஓட்டங்களே தேவையாக இருந்தபோதிலும் அந்த ஓவரை துல்லியமாக வீசிய இசுரு உதான போட்டியை இலங்கையின் பக்கம் திசைதிருப்பினார்.

இறுதிப் பந்தில் தென் ஆபிரிக்கா வெற்றிபெற 2 ஓட்டங்கள் தேவைப்பட்டதுடன் அந்தப் பந்தையும் இசுரு உதான அபாரமாக வீச நிரோஷன் திக்வெல்லவுக்கு ரன்அவுட் வாய்ப்பு கிட்டியது.

ஆனாலும், அதனை அவர் தவறவிட தென் ஆபிரிக்கா 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 134 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் சமநிலை அடைந்தது.

அபாரமாகப் பந்துவீசிய லசித் மாலிங்க 4 ஓவர்களில் 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதனையடுத்து, வெற்றியை தீர்மானிக்க சுப்பர் ஓவர் வழங்கப்பட்டதுடன் லசித் மாலிங்க வீசிய அந்த ஓவரில் தென் ஆபிரிக்கா 14 ஓட்டங்களைப் பெற்றது.

6 பந்துகளில் 15 ஓட்டங்கள் தேவையான நிலையில் பதிலளித்தாடிய இலங்கை அணியால் 4 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

தொடரில் 1 – 0 என தென் ஆபிரிக்கா முன்னிலை பெற்றது.

http://www.espncricinfo.com/series/18645/scorecard/1144172/south-africa-vs-sri-lanka-1st-t20i-sl-in-sa-2018-19

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *