கிழக்கில் 300 தமிழ்க் கிராமங்கள் அபகரிப்பு! – விக்கி பகிரங்கக் குற்றச்சாட்டு

“இரு வேறு சமூகங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் கிழக்கு தமிழ் மக்களின் நிலைமை பாரதூரமான நிலையில் இருக்கின்றது. எமது மக்கள் 300க்கும் அதிகமான தமது பூர்வீகக் கிராமங்களை முற்றாக இழந்துவிட்டார்கள். தொடர்ந்தும் அவர்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கம், அரசியல் ஒற்றுமை என்பவற்றைக் காரணம் காட்டி எமது அரசியல் தலைமைகள் இந்தப் பிரச்சினைகளைத் தட்டிக் கழித்து வருகின்றார்கள் என்று மக்கள் என்னிடம் குறை கூறினார்கள்.”

– இவ்வாறு தெரிவித்தார் வடக்கு முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன்.

நேற்று (19) மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அழைப்பில் பேரெழுச்சியாக பேரணி இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட விக்னேஸ்வரன், பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கிழக்கு மாகாணத்தில் ஆயிரக்கணக்கில் அணிதிரண்டு எமது மக்கள் மேற்கொண்டிருக்கும் இந்தப் போராட்டமானது மிகவும் முக்கியமானது. புதிய பரிமாணமும் உத்வேகமும் கூர்மையும் அடைந்துவரும் தமிழ் மக்களின் உரிமைக்கும் நீதிக்குமான அரசியல் போராட்டத்தில் காத்திரமான பங்களிப்பை வழங்கும் வகையில் இந்தப் போராட்டம் அமைந்திருக்கின்றது.

இந்தப் போராட்டத்தினூடாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் சர்வதேச சமூகத்துக்கும் இலங்கை அரசுக்கும் வெளிப்படுத்தி இருக்கின்ற செய்தி தீவிர கவனத்துக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையிலே 2019 ஆண்டுக்கான முதலாவது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் இந்த வேளையில் எமது மக்கள் பல்வேறு ஏமாற்றுக்கள், ஏமாற்றங்கள், சூழ்ச்சிகள், அடக்குமுறைகள், உதாசீனங்கள், அவமானங்கள் ஆகியவற்றின் மத்தியிலும் ஓர்மத்துடன் வடக்கு கிழக்கில் மேற்கொண்டுவரும் தொடர்ச்சியான இந்தப் போராட்டங்களையும் அவர்களின் கோரிக்கைகளையும் ஐ.நா., சர்வதேச நாடுகள் மற்றும் இலங்கை அரசு ஆகியவை அலட்சியம் செய்துவிடக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன்.

படித்த மக்கள் முதல் பாமர மக்கள் வரை எல்லோரும் ஒன்றாக இணைந்து தாமாகவே இந்தப் போராட்டங்களை எந்த அரசியல் கட்சிகளினதும் பின்னணி எதுவும் இன்றி மேற்கொண்டுவருவதன் தாற்பரியத்தை அலட்சியம் செய்யாமல் அதனைக் கவனத்தில் எடுத்து ஆவண செய்யவேண்டும்.

2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கை அரசின் அனுசரணையுடன் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தினை இலங்கை அரசு நிறைவேற்றப் போகும் நேர்மை மற்றும் பற்றுறுதி ஆகியவை குறித்து எமது மக்களுக்கு அன்று நம்பிக்கை இல்லாத போதிலும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஈடுபாடு காரணமாகவும் அந்த நாடுகள் வெளிப்படுத்திய நம்பிக்கை காரணமாகவும் எமது மக்கள் இதுவரை காலமும் நம்பிக்கையுடன் பொறுமையாக இருந்தார்கள்.

ஆனால், அந்தப் பிரேரணையில் கூறப்பட்ட போர்க்குற்ற விசாரணை உட்பட பல விடயங்களை அமுல்படுத்தப் போவதில்லை என்று ஜனாதிபதியும் பிரதமரும் வெளிப்படையாகத் தெரிவித்த பின்னரும் கூட எதற்காக அந்தத் தீர்மானத்தை இலங்கை அரசு நிறைவேற்றுவதற்கு கால அவகாசம் மீண்டும் கொடுக்கப்படவேண்டும் என்று எமது மக்கள் கேள்வி எழுப்பும் நியாயத்தை இந்த நாடுகள் புரிந்துகொள்ளவேண்டும்.

அதனால்தான் சர்வதேச சட்டத்தின்பிரகாரம், மாற்று வழிகளை மேற்கொள்வது குறித்து ஐ. நா. மனித உரிமைகள் சபை அதன் உறுப்பு நாடுகள் ஆகியவை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எமது மக்கள் கேட்கின்றார்கள். இலங்கையை ஐ.நா. பாதுகாப்பு சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தவேண்டும் என்றும் அதேசமயம் ஐ. நா. மனித உரிமைகள் சபை இலங்கைக்கான விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்கவேண்டும் என்றும் கோருவதில் அர்த்தம் இருக்கின்றது.

எமது மக்களின் இந்தக் கோரிக்கைகளை ஐ. நா மற்றும் சர்வதேச சமூகம் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோருவதுடன் ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் சில தினங்களுக்கு முன்னர் தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த ஆவன செய்யவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன்.

இன்றைய போராட்டத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு கடந்த 16 ஆம் திகதியே கிழக்கு மாகாணத்துக்கு வந்த நான் அம்பாறை மற்றும் மட்டக்களப்பின் பல இடங்களிலும் மக்கள் சந்திப்புகள் பலவற்றை நடத்தி இங்கு வாழும் தமிழ் மக்களின் குறைகள், கவலைகள், கஷ்டங்கள் ஆகியவற்றைக் கேட்டறிந்துள்ளேன். தமிழ் மக்களின் போராட்டத்துக்கு அளப்பெரும் தியாகங்களையும் மகத்தான பங்களிப்பையும் செய்துள்ள கிழக்கு மாகாண மக்கள் தொடர்ந்தும் பெரும் இன்னல்கள் மற்றும் அடக்குமுறைகளின் கீழ் வாழ்ந்துவருவதை என்னால் அறிந்துகொள்ள முடிந்தது.

நில ஆக்கிரமிப்பு, காணாமல்போனவர்களின் குடும்ப நிலை, கணவன்மார்களை இழந்த பெண்கள் நிலை, வேலை இல்லா நிலைமை என்று பல்வேறு பிரச்சினைகள் மத்தியில் அவர்கள் வாழ்ந்துவருவதைக் கண்டு மனம் நொந்துபோயுள்ளேன். இரு வேறு சமூகங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் இங்குள்ள மக்களின் நிலைமை பாரதூரமான நிலையில் இருக்கின்றது. எமது மக்கள் 300 க்கும் அதிகமான தமது பூர்வீகக் கிராமங்களை முற்றாக இழந்துவிட்டார்கள். தொடர்ந்தும் அவர்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கம், அரசியல் ஒற்றுமை என்பவற்றைக் காரணம் காட்டி எமது அரசியல் தலைமைகள் இந்தப் பிரச்சினைகளைத் தட்டிக் கழித்து வருகின்றார்கள் என்று மக்கள் என்னிடம் குறை கூறினார்கள். எமக்கான நியாயமான உரித்துக்கள் தொடர்பில் குரல் எழுப்புவதற்கு நாம் பின்நிற்கத் தேவை இல்லை. அதேசமயம் ஏனைய சமூகங்களின் உரிமைகளை மறுக்கும் வகையிலும் நாம் செயற்படத்தேவை இல்லை. சமூகங்களின் சுமூகம் என்பது ஒரு சாராரின் தலைமைகள் நித்திரைக்குப் போகும் நிலையை ஏற்படுத்தக்கூடாது.

கிழக்கு மாகாணத்தில் அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியாக காணப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவதில் நாம் மூலோபாயங்களை வகுத்து செயற்படவேண்டும். இதில் புலம்பெயர் தமிழ் மக்கள் காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன். தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் வட மாகாணத்தை விடவும் பெருந் தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் பங்களிப்பையும் செய்தவர்கள் கிழக்கு மாகாண மக்கள் தான். ஆயுத ரீதியான போராட்டம் நடைபெற்றபோது கிழக்கு மாகாண மக்கள் செய்துள்ள பங்களிப்பை நான் கேள்விப்பட்டுள்ளேன். அவர்கள் அரசியல் ரீதியாக மேற்கொண்ட பங்களிப்புக்களை நான் நீதிபதியாக இங்கு கடமையாற்றிய காலங்களில் நேரடியாகக் கண்டுள்ளேன். செழிப்பும் வளமும் மிக்க கிழக்குத்தான், நாளை நாம் வடக்கும் கிழக்கும் இணைந்த ஒரு சுய நிர்ணய அடிப்படையிலான தீர்வினைப் பெறும்போது எமக்குச் சுபீட்சமான எதிர்காலத்துக்கான அத்திவாரமாக அமையமுடியும்.

இதனைச் சாத்தியமானதாக்க வேறுபாடுகள் அனைத்தையும் களைந்து நாம் ஒன்றுபட்டு செயற்பட முன்வரவேண்டும். நான் அடிக்கடி இங்கு வந்து இங்குள்ள மக்களைச் சந்திக்கவிருக்கின்றேன். மக்களாகிய நீங்கள் என்னையோ அல்லது எனது கட்சி முக்கியஸ்தர்களையோ எந்நேரத்திலும் தொடர்புகொண்டு உங்கள் பிரச்சினைகள், எதிர்பார்ப்புக்கள் பற்றிக் கூறலாம். அவற்றைத் தீர்க்க நாம் எம்மால் ஆனமட்டில் முயற்சி செய்வோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *