பலகோடி கொடுத்து பந்தய புறாவை வாங்கிய சீனர்கள்!

புறா பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்ற ஒரு புறா வரலாறு காணாத வகையில் 1.25 மில்லியன் யுரோவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

புறாவை ஏலத்தில் விடும் தளமான பிபா ‘அர்மாண்டோ’ எனும் புறாவை சமீபத்தில் ஏலத்தில் விட்டது. அதிக தூரம் கடந்த மிகச்சிறந்த பெல்ஜியம் புறா எனக்கூறப்படும் அர்மாண்டோவை ”புறாக்களின் லூயிஸ் ஹாமில்டன்” என அழைக்கிறார்கள்.

லூயிஸ் ஹாமில்டன் பிரிட்டனைச் சேர்ந்த கார் பந்தைய வீரர். ஐந்து முறை பார்முலா ஒன் உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர்.

இந்த புறா ஏலத்தில் விற்கப்படுவதற்கு முன்னதாக ஒரு புறா அதிகபட்சமாக 376 ஆயிரம் யூரோவுக்கு விற்கப்பட்டிருந்ததே சாதனையாக இருந்தது.

அர்மாண்டோவுக்கு வயது ஐந்துதான். தற்போது ஓய்வுக்காலத்தில் மகிழ்ச்சியாக இருக்கும் அந்த புறா ஏற்கனவே சில குஞ்சுகளுக்கு ‘அப்பா’ ஆகிவிட்டது.

பிபாவின் நிர்வாக இயக்குனர் நிக்கோலஸ் பிபிசியிடம் பேசியபோது ”இது உண்மையான நிகழ்வா? நனவுதானா என சந்தேகம் ஏற்பட்டது. இப்படியொரு விலைக்கு புறா விற்பனையாகும் என கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை.

அதிக பட்சம் 4-5 லட்ச யூரோ விலை போகும் என நினைத்தோம். ஒருவேளை ஆறு லட்ச யூரோ விலை போனால் நன்றாக இருக்குமே என கனவு கண்டோம்.

ஆனால் ஏலத்தில் திடீரென ஒரு போட்டி ஏற்பட்டது ஒரே ஒரு மணி நேரத்தில் 5.32 லட்சம் யூரோவிலிருந்து 1.25மில்லியன் யூரோவுக்கு விலையை ஏற்றிவிட்டனர் சீனர்கள். பொதுவாக ஒரு பந்தய புறாவுக்கு 2,500 யூரோ கிடைப்பதுதான் வழக்கம்” என்றார்.

ஆனால் அர்மாண்டோ ஒரு வழக்கமான பந்தய புறா அல்ல. தான் பங்கேற்ற கடைசி மூன்று பந்தயங்களில் சாம்பியன் பட்டம் வென்றது. 2018 ஏஸ் புறா சாம்பியன்ஷிப், 2019 புறா ஒலிம்பியாட் மற்றும் தி ஆங்குலோமி என மூன்றிலும் சாம்பியன் பட்டம் வென்றது.

பந்தய புறாக்களின் வரலாற்றிலேயே இதுதான் அதிசிறந்த புறா. அர்மாண்டோ ‘புறாக்களின் லூயிஸ் ஹாமில்டன்’ என உள்ளூர் புறா பேன்சியிங் அமைப்பின் தலைவர் ப்ரெட் வான்கைலீ பெல்ஜிய ஊடகத்திடம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *