சர்வதேச விசாரணை கோரி கிழக்கில் இன்று பெரும் மக்கள் எழுச்சிப் பேரணி!

ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகின்ற நிலையில், இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையே வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாணத்தில் பெரும் மக்கள் எழுச்சிப் பேரணியும் ஹர்த்தால் போராட்டமும் நடைபெறவுள்ளன.

இந்தப் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள், வடக்கு – கிழக்கில் உள்ள பொது அமைப்புக்கள், பல்கலைக்கழகச் சமூகங்கள் மற்றும் கல்விச் சமூகங்கள் தமது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளன.

இந்தப் போராட்டத்தால் கிழக்கு இன்று முழுமையாக ஸ்தம்பிக்கும் எனக் கூறப்படுகின்றது.

இந்தப் போராட்டத்துக்கு யாழ். பல்கலைக்கழக சமூகம் முழுமையான ஆதரவை வழங்குகின்றது என்று யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் இலங்கையில் நீண்ட காலமாக கட்டமைக்கப்பட்ட ரீதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அத்தகைய அடக்குமுறைகள் இலங்கைத்தீவில் திட்டமிடப்பட்ட ரீதியிலான – தமிழ் மக்களுக்கு எதிரான – இனச்சுத்திகரிப்பாகவே உள்ளன.

அத்தகைய இனச்சுத்திகரிப்பின் உச்சமே இறுதிப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் ஈழத்தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற இன அழிப்பாகும்.

போர்க்குற்ற மீறல்கள், மனித உரிமைச் சட்ட மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள்களுக்குரிய பரிகார நீதியைச் சர்வதேசம் தமிழ் மக்களுக்குப் பெற்றுத்தர நாம் விழிப்போடு மக்கள் எழுச்சிப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய கடப்பாடு எமக்குள்ளது.

ஜெனிவா மனித உரிமைகள் சபையால் 2015இல் முன்மொழியப்பட்ட நிலைமாறு கால நீதிப் பொறிமுறைக்கு ஊடான உள்ளகப் பொறிமுறைகளையே இலங்கை அரசு நிறைவேற்றத் தவறிய நிலையிலும் ஏற்கனவே கால அவகாசங்கள் வழங்கப்பட்ட நிலையிலும் மீண்டும் கால அவ காசமே வழங்கப்படவுள்ளது. இதனை வெறும் கண்துடைப்பு நாடகமாகவே நாம் நோக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில், ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரி இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் எழுச்சிப் போராட்டத்துக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் முழுமையான ஆதரவை வழங்குகின்றது.

இவ்வகையில் நீதி கோரி இடம்பெற இருக்கும் மக்கள் எழுச்சிப் பேரணியில் அனைத்துத் தமிழ் பேசும் மக்களும் பங்குபற்றி முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *