அர்ஜுன்  மகேந்திரனை ஒப்படைப்பதில் சிங்கப்பூர் ஆமை வேகம்! ஜனாதிபதி மைத்திரி கடும் அதிருப்தி!!

” மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பாக பொறுப்புகூற வேண்டிய முக்கிய நபரான அர்ஜுன்  மகேந்திரனை, இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதில் இழுத்தடிப்பு இடம்பெற்றுவருகின்றது. இது விடயத்தில் சிங்கபூர் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.’  என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இலஞ்ச, ஊழலை ஒழிக்கும் ஐந்தாண்டு செயற்திட்டத்தை வெளியிடும் நிகழ்வு இன்று (18) முற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

” 2015 ஜனவரி 08ஆம் திகதி 62 இலட்சத்து 50 ஆயிரம் மக்களின் வாக்குகளின் மூலம் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட தனது தேர்தல் விஞ்ஞாபனத்தின் முக்கிய விடயமாக அமைந்திருந்தது ஊழல், மோசடிகளை ஒழிப்பதாகும்.

அதற்காக கடந்த நான்கு வருட காலப்பகுதியில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன். அவற்றில் எந்தவொரு அரசாங்கமும் மேற்கொள்ளாத பல்வேறு தீர்மானங்கள் அடங்கியுள்ளன.

வரலாற்றில் இடம்பெற்ற பாரிய கொள்ளையான மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக கண்டறிவதற்கு நான்  நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழுவானது, ஆணைக்குழுக்கள் பற்றி அதுவரையில் மக்கள் மத்தியில் இருந்து வந்த நம்பிக்கையீனம் மற்றும் பின்னடைவான கருத்துக்களை மாற்றியமைத்தது.

நல்லாட்சி எண்ணக்கருவினுள் ஒரு நாடு என்ற வகையில் முன்னேறிச் செல்வதற்குள்ள முக்கிய சவாலாக ஊழல், மோசடிகள் இருக்குமானால் அதனை ஒழிப்பதற்கு நாட்டை நேசிக்கின்ற அனைத்து தரப்பினரும் ஒன்றுபட வேண்டும்.

இலஞ்ச, ஊழலை ஒழிப்பதற்கு தெளிவான நிகழ்ச்சித்திட்டமொன்று நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டபோதும் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பிரச்சினை உள்ளது.

சிறந்த அரச சேவையின் மூலம் இலஞ்ச, ஊழல் இல்லாத சிறந்ததோர் நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஊழல், மோசடிகளுக்கு எதிராக தண்டனை வழங்குதல் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பாக பொறுப்புகூற வேண்டிய அர்ஜ{ன மகேந்திரனுக்கு எதிராக சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே,  அவரை இலங்கையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு சிங்கபூர் பிரதமரிடம் தனிப்பட்ட ரீதியில் கோரிக்கை விடுத்திருந்தேன்.

உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எனக்கு உறுதிவழங்கப்பட்டது. ஆனால், அதற்கான நடவடிக்கை துரிதகதியில் இடம்பெறுவதாக தெரியவில்லை.

இது விடயத்தில் சிங்கபூர் அரசு கூடுதல் கவனம் செலுத்தவில்லை. ஒரு அறிவிப்பைகூட வெளியிடவில்லை. இது கவலையளிக்கின்றது.” என்றார் ஜனாதிபதி.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *