நியூஸிலாந்து சம்பவத்தில் கைதானவருக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும்! – நஸீர் அஹமட் வலியுறுத்து

“நியூஸிலாந்திலுள்ள இரண்டு பள்ளிவாசல்களில் கடந்த வெள்ளியன்று நடைபெற்ற சம்பவங்கள் அந்நாட்டின் கீர்த்திக்கும் அதன் பெருமைக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. காட்டுமிராண்டிதனமாக நடத்தப்பட்ட இந்தச் சம்பவத்தை துரிதகதியில் கட்டுப்பாட்டுக் கொண்டு வந்து, துப்பாக்கிதாரியை கைதுசெய்துள்ள அந்நாட்டின் அரசைப் பாராட்ட வேண்டும். பிரென்டன் ட்ரஸ்ட் என அடையாளம் காணப்பட்டுள்ள அந்தத் தீவிரவாதிக்கு கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும்.”

– இவ்வாறு தெரிவித்துள்ளார் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான நஸீர் அஹமட்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“மனித நேயத்துக்கும் நாகரிகத்துக்கும் அப்பால் அப்பாவி இஸ்லாமிய மக்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலானது 50 பேரைப் பலி எடுத்துள்ளதுடன் பலரையும் காயமடையச் செய்துள்ளது. இதில் கொல்லப்பட்டவர் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

கடந்த வருடம் நானும் இந்தப் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுதிருக்கின்றேன். நியூஸிலாந்து செல்லும் வெளிநாட்டு முஸ்லிம்கள் விரும்பிச் செல்லும் இப்பள்ளிவாசலில் இத்தகையதொரு சம்பவம் நடைபெற்றுள்ளமை உலகம் முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இன அழிப்பின் ஓர் அம்சமாகவே இதனையும் பார்க்கச் செய்கின்றது.

அந்தச் சம்பவத்தில் கைதாகியிருக்கும் கொலையாளிக்குக் கடுமையான தண்டனையை வழங்குவதன் ஊடாக இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாதிருக்கும் வண்ணம் முன்னெச்சரிக்கை வழங்க முடியும். அத்தகைதொரு நிலைப்பாட்டை அந்நாட்டின் பிரதமர் ஜசிந்தா அர்டேர்ன் எடுப்பார் என நாம் நம்புகின்றோம்” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *