14 வருடங்களாக ஏமாறும் கிழக்கு தொண்டர் ஆசிரியர்கள்!

ஒன்பது மாகாணங்களில்  அபிவிருத்தியில் ஒன்பதாவது இடத்தில் இருக்கும் கிழக்கு மாகாணம்,  பல்வேறு அபிவிருத்திகளையும், வேலை வாய்ப்புக்களையும், தனது சுயநிர்ணயத்தையும்  வேண்டி நிற்கிறது என்பது எல்லோரும் ஏற்றுக் கொண்ட ஒரு  விடயமாகும்.

இதில் மிகவும் முக்கியமானது, தொண்டர் ஆசிரியர்கள் நியமனமாகும். 2004ம் ஆண்டிலிருந்து 2019 வரை 14 வருட காலப்பகுதியில்   2005 , 2006 , 2007  ஏப்ரல் மாதம்,  2007  ஜூன்  மாதம், மற்றும் 2018 என  ஐந்து  தடவைகள் தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் நடை பெற்றும், அனைத்திலும் கலந்து கொண்ட   இத்தொண்டர் ஆசிரியர்களுக்கு இன்று வரை பூரணமாக  நியமனங்கள் வழங்கப்படாது இழுத்தடிப்பு செய்யப்பட்டு, தொடர்ந்து  ஏமாற்றப் படுகின்றார்கள் என்பதே உண்மையாகும்.
45 வயதை   தாண்டினாலும்   தொடர்ந்து சகல  நேர்முகப் பரீட்சைகளிலும் தோற்றியவர்களுக்கு வயதெல்லை பார்ப்பதில்லையென  ஏற்கனவே கிழக்கு மாகாண சபையால் அறிவிக்கப்பட்டமைக்கு அமைவாகவே 2018 ல் மீண்டும் அனைவரும் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டனர்.
இந்நியமனம் இன்று கிடைக்கும், நாளை கிடைக்கும் என நம்பியிருந்த  இத்தொண்டர் ஆசிரியர்களின் வயதை  47 ஐயும் தாண்டி, இன்னொரு அரச உத்தியோகத்துக்கு விண்ணப்பிக்க முடியாதவர்களாக ஆக்கியதோடு, இவர்களது 14 வருடங்களையும் விழுங்கி மழுங்கடித்தமைக்கு,  எமது அரசே முழுப் பொறுப்புக்களையும் ஏற்க வேண்டும்.
இந்நியமனம் இழுத்தடிப்பு செய்யப்பட்டதால், பல உள்ளார்ந்த பிரச்சனைகளுக்கு முகம்  கொடுக்க முடியாது திண்டாடிய இத்தொண்டர் ஆசிரியர்களினால், பல தடவைகள் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் அவ்வப்போது  அரங்கேறின.
ஒரு சந்தர்ப்பத்தில் உக்கிரமடைந்த ஆர்ப்பாட்டமானது உச்சத்தினை தொட்ட சந்தர்ப்பத்தில்,  அன்று மாகாண சபை கல்வி அமைச்சராக இருந்த திரு. தண்டாயுதபாணி அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்தவர்களின் பெயர்களை  திரட்டுவதற்காக பெற்ற  440 பேரின் தகவல்களை மாத்திரம் கொண்டு, பலகட்ட  நடவடிக்கையால்  கேபினெட்டின்  அனுமதி பெறப்பட்டதே தவிர, அன்றைய தினம் அதில் கலந்து கொள்ளாத உண்மையான பல தொண்டர் ஆசிரியர்களின் பெயர்கள் தகவல் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப் படாமையினால் கேபினெட் அனுமதி பெற வேண்டிய எண்ணிக்கை குறைவாகவே கணிப்பிடப்பட்டது.
2018 ல் நடைபெற்ற நேர்முகப் பரீட்சைக்கு தோற்றிய கிட்டத்தட்ட  1000 பேரில்  தெரிவு செய்யப்பட்டதாக  456 தொண்டர் ஆசிரியர்களின் பெயர்கள் கிழக்கு மாகாண சபையினால் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.
அதில் சகல தகுதிகளும் இருந்தும் ஏதோ ஒரு காரணத்தினால்  தவற விடப்பட்டவர்களை மீள்பரிசீலனை செய்வதற்கு மீண்டும் விண்ணப்பிக்கும் படியும், தகுதியில்லாது சேர்த்துக் கொள்ளப்பட்ட நபர்கள் சம்பந்தமான தகவல்களை  அறிவிக்கும் படியும் கேட்கப்பட்டிருந்தது. 
நேர்முகப் பரீட்சைக்கு தொண்டர் ஆசிரியர்களிடம் கொண்டு வரும்படி சொல்லப்படாத ஆவணங்கள் கேட்கப்பட்டதுடன், சில ஆவணங்களின் நிழல் பிரதிகள் தெளிவின்மையாலும், சில ஆவணங்கள் கொண்டு வரப்படாமையாலும் உண்மையான பல தொண்டராசிரியர்களின் பெயர்கள், தெரிவு செய்யப்பட்ட பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கவில்லை.
ஆனால், குறிப்பிட்ட காலப்பகுதியில் வெளிநாடுகளில் அல்லது வேறு அலுவலகங்களில்  பணியாற்றியவர்களும், நீண்ட காலமாக மூடிக் கிடந்த பாடசாலைகளில் கற்பித்தவர்களும், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களுக்கு தெரியாத தொண்டர் ஆசிரியர்களும், அரசியலால் உள்வாங்கப்பட்டு ஆவணங்களை மாத்திரம் கொண்டு பணியாற்றியதாக உள்வாங்கப்பட்டவர்களின் பெயர்களும்  தெரிவு செய்யப்பட்ட பட்டியலில் இருக்கத் தவறவில்லை என,  கிழக்கு மாகாண சபைக்கு முன்னால் மீண்டும் போராட வேண்டும் என வந்த தொண்டர் ஆசிரியர்களினால் இது போன்ற  பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
ஆனால் கொடுக்கப்பட்ட  மனுக்களின் மீதான  மீள்பரிசீலனையின் போது விடுபட்ட தகுதியான தொண்டர் ஆசிரியர்கள் பலர் மீண்டும் உள்வாங்கப்பட்டு பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டதுடன், அழைக்கப்படாத  தொண்டர் ஆசிரியர்கள் மீண்டும் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டு, தகுதியானோர் தெரிவு செய்யப்பட்டு, மொத்தமாக கிட்டத்தட்ட 811   தொண்டர் ஆசிரியர்களின் பெயர்கள் கிழக்கு மாகாண சபையால் கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ஆனால் கல்வி அமைச்சினால்  811   தொண்டர் ஆசிரியர்களுக்கும் இறுதியாக ஒரு நேர்முகப் பரீட்சையினை நடாத்தி, அதன் மூலம் தெரிவு செய்யப்படுகின்றவர்களுக்கு நியமனத்தினை வழங்குவதாக கல்வி அமைச்சுக்கு வருகை தந்த தொண்டர் ஆசிரியர்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதே தவிர, இது வரை எந்த செயற்பாட்டினையும் காணவில்லை என தொண்டர் ஆசிரியர்கள் கவலை கலந்த விமர்சனங்களை தெரிவிக்கின்றனர்.
இத்தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனங்கள் அனைத்து மாகாணங்களிலும் வழங்கப்பட்டுள்ளது, வடமாகாணமே இறுதியாக வழங்கியது. ஆனால் கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இராஜாங்க, பிரதி அமைச்சர்கள், கேபினெட் அமைச்சர்கள், ஆளுநர்  என பல்வேறு தரப்பினர்கள் காணப்பட்டும்  இன்று வரை சகல நடவடிக்கைகளும் ஏட்டுச் சுரைக்காயாக காணப்படுவதோடு,  இதன் முடிவுகளும் பூச்சியமாகவே உள்ளது.
எமது ஜனாதிபதி  போதை பொருட்களை இல்லாதொழிக்கும்  செயற்பாட்டில்  வெற்றிப் பாதையில் செல்வதுடன், பல பாரிய அபிவிருத்தித் திட்டங்களையும்  முன்னெடுத்து வருகிறார். வடக்கின் அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தி  உட்பட நாட்டின் பல அபிவிருத்திகள் பிரதமரினால் சிறப்பாக மேற்கொள்ளப்படுவதோடு.  நாட்டின் பல பாகங்களிலும் பல்வேறு அபிவிருத்திகள் நடை பெரும்  இக்காலகட்டத்தில், இந்நியமனம் தொடர்பாக பல சிறுபான்மை அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளும் பொய்யாகிப் போன இச்சூழ்நிலையில் ,  இன்று கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களின்  நியமனம் மட்டும் புறக்கணிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி  கௌரவ ஹிஸ்புல்லா பல விடயங்களில் தைரியமாக செயற்படுகிறார் என பேசப்பட்டாலும், இன, மத, மொழி பேதமின்றி செயற்படும் ஜனாதிபதி, பிரதமர், கேபினெட் அமைச்சர்கள் என பல்வேறு தரப்பினர்களின் ஆதரவு ஆளுநருக்கு இருப்பதாலும்  சகல இன, மத, மொழி மக்களும் இங்கு  வாழ்வதால்  கிழக்கில் இருந்து ஐக்கியத்தை மேம்படுத்திச் செல்ல, இந்நியமானத்தை வழங்குவதற்கு இதுவே ஒரு சரியான சந்தர்ப்பம் என்ற “ஆதரவு அரசியல் தந்திரோபாய  நகர்வுகளுக்கு”  அமைய ஆளுநர் கலாநிதி  கௌரவ ஹிஸ்புல்லா இத்தொண்டர் ஆசிரியர்களின் நியமனங்களை  வழங்கி சாதிப்பாரா? என்ற எதிர்பார்ப்புக்களும், கேள்விகளும்  இன்று ஆளுநரின் தைரியத்தையும், அரசின் இயலுமையினையும் பரீட்சிக்கும் ஒரு களமாக, இந்நியமானம் அமைய போகிறது என்பதை அவர்களும் ஒரு கணம் சிந்திக்க வேண்டும்.
இவ்விடயம் தொடர்பாக பல தடவைகள் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர்  பஷீர் சேகுதாவூத்தினாலும்,  செயலாளர் நாயகம் எம்.டி. ஹஸனலியினாலும் தொண்டர் ஆசிரியர்களின்  இந்நியமானத்தினை தாமதிக்காமல் வழங்கும் படி  பலமுறை சம்பந்தப்பட்டவர்களை கேட்டு வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி  கௌரவ ஹிஸ்புல்லாவினை சந்தித்து இந்நியமானத்தை மிக விரைவாக வழங்குவதற்குரிய  நடவடிக்கைகளை எடுத்து வருவதையும் காணக் கூடியதாகவும்  உள்ளது.
ஐ.எம்.ஹாரிப்
ஐக்கிய சமாதான கூட்டமைப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *