பெருந்தோட்டப்பகுதி பாடசாலைகளுக்கான நிதியை முழுமையாக பெற்று தரவும்!

பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள பாடசாலைகளின் அபிவிருத்திக்காக வருடாந்தம் ஒதுக்கப்படும் நிதியை முழுமையாக பெற்றுக்கொடுப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று ( 15) சபையில் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் எம்.பியால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கு பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது.

தினப்பணிகள் முடிவடைந்தப்பின்னர், கல்வி அமைச்சு, நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு குறித்தான குழுநிலை விவாதம் ஆரம்பமானது.

இதில் உரையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சர்,

”  மலையகத்தில் தோட்டப்புறங்களிலுள்ள பாடசாலைகளுக்கு தலா இரண்டு ஏக்கர் வீதம் காணி, பெருந்தோட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தாலும் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

பெருந்தோட்டப்பகுதிகளில் ஐந்து தேசிய பாடசாலைகளே உருவாக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப அத்தொகை மேலும் அதிகரிக்கப்படவேண்டும்.” என கூறினார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பிய வேலுகுமார் எம்.பி.,

”  பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள பாடசாலைகளின் அபிவிருத்திக்காக கடந்த வருடம் 450 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தாலும் அதில் 200 மில்லியன் ரூபா வரையான தொகையே செலுத்தப்பட்டது. எஞ்சியத்தொகை நிலுவையாகவுள்ளது.

எனவே, வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக இம்முறை ஒதுக்கப்படும் நிதி, அதற்கு ( கடந்த வருட நிலுகைக்கு) ஈடுசெய்யப்படும் என்றும், இதனால், புதிய திட்டங்களை உள்வாங்கமுடியாத நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகின்றது.

எனவே, இம்முறை ஒதுக்கப்படும் நிதியை ( 450 மில்லியன் ரூபாயை) பெருந்தோட்டப்பகுதி பாடசாலைகளின் அபிவிருத்திக்கு முழுமையாக பெற்றுதருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கு பதிலளித்த கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்,

” கல்வி அமைச்சின் கவனத்துக்கு விடயம் கொண்டுவரப்பட்டுள்ளதால், அது குறித்து அமைச்சு உரிய நடவடிக்கையை எடுக்கும்.” என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *