இலங்கையில் படுகொலைகள் தொடர்கின்றன! – கடுமையாக விமர்சித்து அமெரிக்கா அறிக்கை

உள்நாட்டுப் போரில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாக  இலங்கை படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூறும் பொறிமுறை இன்னமும் உருவாக்கப்படவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள, 2018ஆம் ஆண்டுக்கான, மனித உரிமைகள் அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

சித்திரவதைகள், ஏனைய கொடூரமான மனிதத்தன்மையற்ற மோசமான நடத்தைகள் மற்றும் தண்டனைகள் இலங்கையில் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களில் தடை செய்யப்பட்டுள்ள போதிலும், அதிகாரிகள் அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள்.

பொதுவாக சிவில் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் பாதுகாப்புப் படைகள் இருந்தாலும்,  இலங்கை இராணுவம் மற்றும் காவல்துறை என்பன, பொதுமக்களைத் துன்புறுத்துகின்றன. அவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலையும் தொடர்கிறது.

உள்நாட்டுப் போரில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாக இலங்கை படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூறும் பொறிமுறை இன்னமும் உருவாக்கப்படவில்லை

எனினும், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சில அதிகாரிகளுக்கு எதிராக, விசாரணை செய்வதற்கும், சட்டத்தின் முன் நிறுத்தவும், தண்டனை விதிக்கவும், கடந்த ஆண்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்டத்துக்கு புறம்பான கொலைகள், சித்திரவதை, பாலியல் துன்புறுத்தல், அரசாங்கப் படைகளால் தன்னிச்சையாக தடுத்து வைத்தல், இணைய முடக்கம், ஊழல் உள்ளிட்ட மனித உரிமை பிரச்சினைகள் இலங்கையில் தொடருகின்றன.

காணாமல் ஆக்கப்பட்ட தமது கணவன் பற்றிய தகவலை தேடும் பெண்களும், கணவனை இழந்த பெண்கள் நன்மைகளைப் பெற முனையும் போதும்,  பாதுகாப்புத் துறை அதிகாரிகளாலும், அரசாங்க அதிகாரிகளாலும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

காவல்துறை தொடர்ச்சியாக சித்திரவதைகளில் ஈடுபட்டு வருகிறது.” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பம்பியோ நேற்று முன்தினம் வெளியிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *