‘நீதிக்காய் எழுவோம்’ மக்கள் பேரணியில் அணிதிரள்வோம்! – கூட்டமைப்பு அழைப்பு

யாழ். மக்கள் பேரணியில் அரசியல் கடந்து ஆதரவளிக்கும் முகமாக அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் நாளை வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படும் ‘நீதிக்காய் எழுவோம்’ மக்கள் பேரணியின் இலக்கும் செய்தியும் ஐ.நா. மனித உரிமைகள் சபை உள்ளடங்களாக சர்வதேசத்தை எட்ட வேண்டும்.

இதற்காக அரசியல் கடந்து அனைவரும் ஆதரவளிக்கும் முகமாக பங்கேற்க வேண்டும். 2009இல் இலங்கையில் போர் ஓய்ந்த நிலையில் செப்டெம்பரில் ஐ.நாவின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கி – மூன் கொழும்பு வந்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்தார். போர்க்குற்றங்களை விசாரிக்கவும், இலங்கை இனப்பிரச்சினை உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் இருவரும் ஒரு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

தமிழர் பிரதிநிதிகளையும் செயலாளர் நாயகம் சந்தித்திருந்தார். 2011 ஒக்டோபர் 24இல் இலங்கைத் தமிழர் தலைவர்கள் அமெரிக்க இராஜாங்க அமைச்சுக்கு அழைக்கப்பட்டு மூன்று நாட்கள் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இலங்கையில் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வுப் பிரேரணை ஐ.நா. மனித உரிமைகள் சபைக்குக் கொண்டு வருவதற்கு 27ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டது.
அந்த அடிப்படையில் 2012இல் அமெரிக்கா முன்வைத்த தீர்மானம் 24 வாக்குகளைப் பெற்று நிறைவேறியது.
அந்தப் பிரேரணையை அமெரிக்கா முன்னெடுக்காது விட்டால் நிறைவேறியிருக்க முடியாது. ஆனால், அந்தத் தீர்மானம் சிலரால் ஜெனிவா வெளியிடத்தில் தீயிட்டுக் கொழுத்தியமை துரதிர்ஷ்டமானது.

2013இல் ஐ.நா. மனித உரிமைகள் சபை ஆணையாளராக நவநீதம்பிள்ளை பல தடைகளைத் தாண்டி கொழும்பு வந்தார். தமிழ்த் தலைவர்களுடன் நீண்ட நேரம் பேச்சு நடத்தினார். அரச தரப்பையும் சந்தித்தார்.

ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெளிவாகவும், கடும் தொனியிலும் இலங்கை மீது போர்க்குற்ற விசாரணைக்குச் சர்வதேச பங்களிப்பு முதலான திட்டங்கள், நடவடிக்கைகளையும் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் முன்வைத்தார்.

அவர் கொழும்பு வருகையின்போது எதிர்த்தும், ஆதரித்தும் கிளர்ச்சிகள் இடம்பெற்றன. 2013இலும் முன்வைக்கப்பட்ட தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானங்களின்போது இலங்கை,ரூசியா, சீனா, பாகிஸ்தான் நாடுகள் உள்ளிட்ட பத்து நாடுகள் எதிர்த்தே வாக்களித்து வந்தன.

2014இலும் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணையையே வலியுறுத்தியது.

2015இல் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் – ஹுசைன் இலங்கை வந்தார். ஒரு தீர்க்கமான அறிக்கையை வெளியிட்டார். இலங்கை மீதான ஏமாற்றத்தை வெளியிட்டார்.

2015 ஒக்டோபரில் 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானம் பல முன்னேற்றமான கடுமையான நடவடிக்கைகளை இலங்கைக்கு எதிராக முன்வைத்து வற்புறுத்தியது. 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு ஆறுதலை அளித்தது.

2017 மார்ச் 23இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 2015இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின் இலங்கையின் அனுசரணையுடன் ஏகமனதாக 47 நாடுகளும் இணைந்து 34/1 தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்தத் தீர்மானம் சர்வதேச நாடுகளில் ஓர் இராஜதந்திர வெற்றியாகப் பார்க்கப்பட்டது; வர்ணிக்கப்பட்டது. இருப்பினும் இலங்கை அரசு அந்தத் தீர்மானங்களை முழுமையாகவே நிறைவேற்றத் தவிர்த்து வருகின்றது.

மீண்டும் 2019 மார்ச் 8இல் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்லே பச்செலெட் பாராட்டக் கூடிய வகையில் இலங்கை தொடர்பில் ஓர் காட்டமான அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார்.

அதனை முழு மனதுடன் நாம் வரவேற்கின்றோம். ஆனால், 2018இல் ஐ.நாவிலும், 2019இல் இலங்கையிலிருந்தும் இலங்கை ஜனாதிபதி, “மனித உரிமைகள் சபைத் தீர்மானங்களை ஏற்கமாட்டோம். அவற்றைத் தூக்கி வெளியே போடுங்கள்” என்று சூளுரைக்கின்றார்.

2019 மார்ச்சில் புதிதான இப் பிரேரணையை பிரிட்டன் – ஜேர்மனி தலைமையில் கனடா, அயர்லாந்து, மொன்ரெனிக்ரோ, வடக்கு மசிடோனியா முதலான 6 நாடுகள் முன்வைத்துள்ளன.

அமெரிக்கா வெளியிலிருந்து ஆதரவு வழங்குகின்றது. இத் தீர்மானம் சபையில் பலத்த சவால்களை நெருக்கடிகளைச் சந்திக்கிறது.

ஆகக் குறைந்தது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அறிக்கையின் அடிப்படையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தரப்புக்கு வெற்றியாகிவிடும். மீண்டும் பாதிக்கப்பட்ட நாம் ஏமாற்றப்பட்டு விடக் கூடாது. இலங்கை உலக நாடுகளின், ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தலையீடுகள், கண்காணிப்பிலிருந்து விலகி விடும். இதற்கு இடமளிக்க முடியாது.

ஐ.நா. மனித உரிமைகள் சபை ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 30/1 மற்றும் 34/1 தீர்மானங்களின் அடிப்படையில் மேம்பட்ட காத்திரமான குறுகியகால அட்டவணையில் அத்தீர்மானங்களை முழுமையாக இலங்கை நிறைவேற்றுவதற்கு ஆணையாளரின் அறிக்கையில் அறுதியிட்டவாறு தீர்மானம் ஒன்று மார்ச் 20இல் நிறைவேற்றப்பட வேண்டும் அல்லது மாற்று வழிகள் அறிவிக்கப்பட வேண்டும் என வற்புறுத்துகின்றோம்.

2018 ஐப்பசியில் மஹிந்த பிரதமராக நியமிக்கப்பட்டபோது அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாய நாடுகள் வாழ்த்துத் தெரிவிக்கவில்லை. அவருக்கு எதிராக எச்சரிக்கைதான் விடுத்தன. பொருளாதார உதவித் திட்டங்களைத் திரும்பப் பெற்றன. இலங்கை மீது பலவிதத் தடைகளை, நடவடிக்கைகளை அறிவித்தன.

இலங்கை உயர்நீதிமன்றின் முழு நீதியரசர்களும் ஜனாதிபதியின் ஜனநாயக அரசமைப்புக்கு மாறான நடவடிக்கைகளுக்கு எதிராகத் தீர்ப்பளித்தனர் என்பதை நினைவூட்டலாம்.

இத்தகைய நடவடிக்கைகள் ஏன் இலங்கை அரசுக்கு எதிராக உலக நாடுகள் எடுக்க முடியாது என கேள்வி எழுப்புகின்றோம்?

ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 30/1 மற்றும் 34/1 தீர்மானங்கள் ஆணையாளர் அறிக்கையில் கூறியவாறும் குறுகிய கால அட்டவணைக்குள் இலங்கை அரசு முழுமையாக நிறைவேற்றாதுவிட்டால் சர்வதேச, ஐ.நா சாசன வழிகளில் மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வற்புறத்துவோம்.

இதற்கான பொருத்தமான தீர்மானங்களை எடுக்க ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகள், ஐ.நா. சபை குறிப்பாக பாதுகாப்புச் சபை , வல்லாண்மை நாடுகளை இராஜதந்திர ரீதியில் நாம் ஒன்றுபட்டு வென்றெடுக்க வேண்டும்.

இதற்கான திட்டங்களையிட்டு தீர்மானிப்பதற்கு அரசியல் கட்சிகளைக் கடந்து நாம் செயற்பட வேண்டும். இந்த இலக்கைக் கொண்டுதான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் 16ஆம்,19 ஆம் நாட்களில் பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த அழைப்பை ஏற்போம். அரசியல் கடந்து இந்த ஜனநாயகப் போராட்டத்தை வரவேற்போம். ‘நீதிக்காய் எழுவோம்’ மக்கள் பேரணியில் ஓரணியில் திரள்வோம்” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *