பொள்ளாச்சி பாலியல் வன்முறை! நடந்தது என்ன, பாதிக்கப்பட்டது எத்தனை பெண்கள்?

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஏமாற்றி வல்லுறவு செய்து, அதனை வீடியோ எடுத்து சில இளைஞர்கள் பணம் பறித்த விவகாரம் தற்போது தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நூற்றுக்கணக்கான பெண்களை அந்த இளைஞர்கள் மிரட்டி பணம் பறித்ததாகவும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் அவ்வாறு வலம் வருவதாகவும் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் செய்திகள் பரவி வருகின்றன. உண்மை நிலை என்ன?

பெப்ரவரி மாதம் 24ஆம் திகதியன்று பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் நிலையத்தில் கல்லூரி மாணவி ஒருவர் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரின்படி,

கடந்த பெப்ரவரி 12ஆம் திகதி அந்த மாணவியின் நண்பரான சபரிராஜன் என்ற ரிஸ்வந்த் தன்னை பொள்ளாச்சியில் உள்ள பேருந்து நிறுத்தம் ஒன்றில் வந்து சந்திக்கும்படி அழைத்திருக்கிறார்.

அன்று மதியம் அந்தப் பெண் அங்கு சென்றபோது காருடன் நின்றிருந்த சபரிராஜன், அதில் ஏறும்படி கூறினார்.

காரை திருநாவுக்கரசு என்பவர் ஓட்டிச் செல்ல, பின் இருக்கையில் அந்தப் பெண்ணும் சபரிராஜனும் அமர்ந்துகொண்டனர்.

நடுவழியில் வசந்தகுமார், சதீஷ் ஆகிய இருவரும் ஏறிக்கொண்டனர்.

கார் ஓடிக்கொண்டிருக்கும்போதே, அந்தப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வீடியோ எடுத்த அவர்கள், அவரிடமிருந்த 20,000 ரூபாய் மதிப்புள்ள தங்கச் சங்கிலியையும் பறித்துக்கொண்டனர்.

காருக்கள் வைத்தே வீடியோ!

தாங்கள் விரும்பும்போதெல்லாம் தங்களை வந்து சந்தித்து, தாங்கள் சொல்லுபடியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும்;

கேட்கும் போதெல்லாம் பணம் தர வேண்டும்; இல்லாவிட்டால் அந்த வீடியோவை இன்டர்நெட்டில் வெளியிடுவோம் என்று மிரட்டியவர்கள், நடுவழியில் அந்தப் பெண்ணை இறக்கிவிட்டனர் என அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.

அந்தச் சம்பவத்தை உடனடியாக அந்தப் பெண் வீட்டில் சொல்லவில்லை. ஆனால், அடுத்தடுத்து போன் செய்து அந்த இளைஞர்கள் பணம் கேட்கவும், தன் குடும்பத்தினரிடம் நடந்த சம்பவத்தைச் சொன்னார் அந்தப் பெண்.

இதையடுத்து திருநாவுக்கரசையும் சபரிராஜனையும் தேடிப் பிடித்த அந்தப் பெண்ணின் சகோதரர், இருவரையும் அடித்து உதைத்து நடந்த சம்பவங்களைக் கேட்டறிந்தார். அவர்களிடமிருந்த செல்போன்களையும் பறிமுதல் செய்தார்.

அந்த செல்போன்களில் மேலும் மூன்று பெண்களிடமும் இவர்கள் இதேபோல மிரட்டி எடுத்த வீடியோக்கள் இருந்தன. இதையடுத்தே பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் சபரிராஜன், சதீஷ், திருநாவுக்கரசு, வசந்தகுமார் ஆகிய நான்கு இளைஞர்கள் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இதற்கு அடுத்த நாள் சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய மூவரும் கைதுசெய்யப்பட்டனர். திருநாவுக்கரசு தேடப்பட்டுவந்தார்.

குற்றம்சாட்டப்பட்ட நால்வரில் ஒருவரான சபரிராஜன் என்ற ரிஷ்வந்த், இளம்பெண்களிடம் பழகி அவர்களைத் தனிமையான இடத்திற்கு வரவழைத்து கட்டாயப்படுத்தியோ, மயக்கியோ உறவுகொள்வதை மற்றவர்கள் மறைந்திருந்து வீடியோ எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கின்றனர்.

பிறகு அந்த வீடியோவையும் படங்களையும் காட்டி அந்தப் பெண்களிடமிருந்து பணம் பறித்துவந்துள்ளனர்.

உடலுறவின் பின்னர் பணம் பறிப்பு!

சில சமயங்களில் அடித்து துன்புறுத்தியும் ஆடைகளைக் களைந்தும் படம் எடுத்துள்ளனர். இவ்வாறு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை ஊடகங்கள் வெளியிட்டன.

இந்த வீடியோவில் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பெண், “ரிஷ்வந்த் உன்னை நம்பித்தானே வந்தேன்” என்று பலமுறை கூறுவது தெளிவாகக் கேட்கிறது.

அந்த வீடியோவில் திருநாவுக்கரசு என்ற இளைஞரும் பலமுறை தென்படுகிறார்.

சமீபத்தில் வெளியான மற்றொரு வீடியோவில் சதீஷ் இடம்பெற்றிருக்கிறார். மூன்றாவது வீடியோவில் “மீண்டும் நாளை வந்து தன்னை சந்திப்பாயா?” என திரும்பத் திரும்பக் கேட்கிறார் ரிஷ்வந்த்.

சில தருணங்களில் அந்தப் பெண்கள் விரும்பியே உறவுகொண்டிருந்தாலும், அதனை வீடியோ எடுத்து பிறகு மிரட்டி பணம் பறிப்பதற்கும் மீண்டும் மீண்டும் உறவுகொள்வதற்கும் இந்த இளைஞர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கில் பிப்ரவரி 24ஆம் தேதியன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நாள் புகார் கொடுத்த பெண்ணின் சகோதரரை திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜனின் நண்பர்கள் தாக்கினர்.

அதே நாளில் திருநாவுக்கரசு தவிர்த்த மூன்று பேர் அன்றைய தினம் கைதுசெய்யப்பட்டனர்.

இதற்குப் பிறகு, தாக்குதல் வழக்கில் பிப்ரவரி 26ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டு, செந்தில், பாபு, மணி, வசந்தகுமார் ஆகியோர் மீது வழக்கும் பதிவுசெய்யப்பட்டது.

பிறகு இந்த வழக்கில் ஆளும் அ.தி.மு.கவின் உறுப்பினரான பார் நாகராஜ் என்ற முத்துசாமி ஐந்தாவது நபராக சேர்க்கப்பட்டார். இதையடுத்து நாகராஜை கட்சியிலிருந்து அ.தி.மு.க. நீக்கியது.

இந்தத் தாக்குதல் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.

பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை?

பொள்ளாச்சி பகுதியில் இதுபோல நூற்றுக்கணக்கான பெண்களை ஏமாற்றி இந்த இளைஞர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்திருக்கலாம் என ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் செய்திகள் பரவிவருகின்றன.

ஆனால், அந்த இளைஞர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களில் எடுக்கப்பட்டு இதுவரை வெளியான வீடியோக்களில் இதுவரை ஆறு பெண்கள் இடம்பெற்றிருப்பது தெரியவந்திருக்கிறது.

இந்த வழக்கை விசாரித்துவரும் சிபிசிஐடி காவல்துறையினரிடம் கேட்டபோது, மேலும் சில பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், 100-150 என்ற எண்ணிக்கை தவறானது என்று மட்டும் தெரிவிக்கிறார்கள்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திருநாவுக்கரசு என்பவர் கைது ஆவதற்கு சில தினங்களுக்கு முன்பாக வெளியிட்ட குரல் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் “காவல்துறைக்கு சொல்லிக்கிறேன்.

நீங்க ஒரே ஒரு வழக்குதான் பொய் வழக்குப் போட்டீர்கள். பாக்கி 99 பிள்ளைகள் எனக்குத்தான் வேலை செஞ்சுக்கிட்டு இருக்காங்க” என்று கூறியிருக்கிறார்.

ஆனால், இந்த ஆடியோவின் உண்மைத்தன்மையை இதுவரை காவல்துறை உறுதி செய்யவில்லை.

நன்றி – பிபிசி தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *