மைத்திரிக்கு எதிராக பொன்சேகா சபையில் கடும் சொற்கணை வீச்சு! – அரசியல் சூழ்ச்சியின் தந்தை என்றும் காட்டமாக வர்ணிப்பு

அரசியல் சூழ்ச்சியின் தந்தை என்றும்
ஜனாதிபதியைக் காட்டமாக வர்ணிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சபையில் சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்த முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி., ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டை ஆதரிக்கப்போவதில்லை என்றும் அறிவித்தார்.

அத்துடன், ஜனாதிபதியின் தலைமைத்துவத்தை  ஒட்டகத்துடன் ஒப்பிட்டுப் பகைமை பொங்க கருத்துகளை முன்வைத்தார் பொன்சேகா.

நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுவரும் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கெல்லாம் ஜனாதிபதியே பிரதான காரணம்.  அரசால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு அவர் ஒத்துழைப்பு வழங்குவதில்லை. எப்போது ஆட்சி கவிழும் என விழிமீது விழிவைத்து காத்திருப்பதுடன், விரைவில் அது நடந்தாக வேண்டும் எனப் பிரார்த்தனையும் செய்கின்றார்.

அதுமட்டுமல்ல ஆளுங்கட்சி உறுப்பினர்கள்  நன்மை செய்தால்கூட தனது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக அதைத் தடுத்து நிறுத்தி, காலைவாரும் செயலில் இறங்கியுள்ளார்.

வெளிநாடுகளுடனான வர்த்தக உடன்படிக்கை, உயர்தர மாணவர்களுக்கு ‘டெப்’ வழங்கும் யோசனை என அனைத்து விடயங்களிலும் எதிர்மறையான பார்வையையே ஜனாதிபதி செலுத்தி வருகின்றார். திட்டமிட்ட அடிப்படையில் தடைகளை ஏற்படுத்துகின்றார்.

ஆட்சி கவிழவேண்டும், ஐக்கிய தேசியக் கட்சி ஒழிய வேண்டும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு வேட்புமனு கிடைக்க வேண்டும் எனச் சிந்திக்கும் ஜனாதிபதி, தான் எதைச் சொன்னாலும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் செவிமடுப்பதில்லை என எமக்கு எதிராக விரல் நீட்டுகின்றார்.

அமைச்சர்கள் மட்டுமல்ல, இன்னும் ஐந்து, ஆறு மாதங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள்கூட ஜனாதிபதியின் கருத்துக்கு கட்டுப்படமாட்டார்கள். இதுதான் யதார்த்தம்.

பிரதமரின் ஆலோசனையின் பிரகாரமே ஜனாதிபதி அமைச்சுப் பதவிகளை வழங்கவேண்டும். ஆனால், தனிப்பட்ட பகைமை காரணமாக எனக்கு அமைச்சுப் பதவி வழங்க அவர் மறுத்துவிட்டார்.

மலிக் சமரவிக்கிரம பதவி துறந்த பின்னர், பொன்சேகாவை அமைச்சராக்குமாறு பிரதமர் கோரினார். ஆனால், வழங்கவே முடியாது என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருந்தார்.

அன்று மஹிந்த சிந்தனையை முன்னெடுத்த மஹிந்த, எமது நெஞ்சில்தான் சுட்டார். அவருக்கு எதிராக போராடினோம். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினோம். இறுதியில் மெதமுலனவில் ஜன்னலில் தொங்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது. ஆனால், இன்று மைத்திரி சிந்தனை எம் முதுகில் குத்துகின்றது.

ஒட்டகப் படைக்கு சிங்கம் தலைமைத்துவம் வழங்கினால் போரில் ஒட்டகப்படை வெற்றிபெறக்கூடும். ஆனால், சிங்கப்படைக்கு, ஒட்டகம் தலைமைத்துவம் வழங்கினால் சமரில் வெற்றிபெறமுடியாது. இந்த அரசிலும் சிங்கம்போல் செயற்படக்கூடியவர்கள் இருக்கின்றனர். ஆனால், ஒட்டகமொன்றே தலைமைத்துவம் வழங்குகின்றது. பிரதமரை அல்லர், அரச தலைவரையே நான் இவ்வாறு குறிப்பிடுகின்றேன்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *