மஹிந்த பச்சைக்கொடி காட்டினால் மைத்திரியை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம் – பஸில்

ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை, மஹிந்த ராஜபக்ச முன்மொழிவாரானால் அதை நிச்சயம் ஏற்போம் – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் மாநாடு இன்று (13) முற்பகல் பத்தரமுல்ல – நெலும் மாவத்தையிலுள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, சுதந்திரக்கட்சியும், பொதுஜன பெரமுனவும் இணைந்து அமைக்கவுள்ள புதிய கூட்டணியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன பெயர் முன்மொழியப்படுமானால் அதை ஏற்பீர்களா என ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த பஸில் ராஜபக்ச,

” மஹிந்த ராஜபக்சவால் பெயரிடப்படும் நபரை ஜனாதிபதி வேட்பாளராக ஏற்பதற்கு தயார் என ஏற்கனவே நாம் அறிவித்துள்ளோம். எனவே,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரை, மஹிந்த ராஜபக்ச முன்மொழிவாரானால் அதை ஏற்போம். அதில் எந்த பிரச்சினையும் கிடையாது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தயார் என கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார். இதுபோல், போட்டியிட விரும்பும் ஏனையத் தலைவர்களும் தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். அப்போதுதான் மக்களிடம் கருத்தறிய இலகுவாக இருக்கும்.

14 ஆம் திகதி சுதந்திரக்கட்சியும், பேச்சு நடத்துவோம். கருத்துகளால் மட்டுமல்ல அனைத்து விடயங்களிலும் ஒத்துபோனால்தான் சிறப்பான கூட்டணி அமையும்.

சு.கவுடன் நாளை பேச்சு

புதிய கூட்டணி  குறித்து சுதந்திரக்கட்சிக்கும், பொதுஜன பெரமுனவுக்குமிடையில் 14 ஆம் திகதி ( நாளை) சந்திப்பு நடைபெறவுள்ளது. இதன்போது மனம்விட்டு பேசவுள்ளோம். கருத்தால் மட்டுமல்ல அனைத்து விடயங்களிலும் ஒன்றுபட்டால் மட்டுமே வெற்றியை நோக்கி பயணிக்க கூடியதாக இருக்கும்.

வடக்கு, கிழக்கிலும் பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாடு விஸ்தரிக்கப்படவுள்ளது. இன்னும் மூன்று மாதங்களுக்குள் இப்பணிகள் நிறைவுபெறும்.” என்றார் பஸில் ராஜபக்ச.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *