இலங்கைக்கு இதுவே இறுதிச் சந்தர்ப்பம்! – ஐ.நா. பரிந்துரைகளை நிறைவேற்றுவது மிக அவசியம் என சம்பந்தன் வலியுறுத்து

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள காட்டமான அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனதார வரவேற்கின்றது. ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும் இலங்கை அரசுக்கு இறுதிச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இனியாவது அரசு ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்; வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும். அதேவேளை, சர்வதேச சமூகத்தின் கண்காணிப்புக்கான காலத்தை நீடித்து ஜெனிவாவில் இம்முறை நிறைவேறவுள்ள புதிய தீர்மானத்துக்கும் அரசு இணை அனுசரணை வழங்கி அதனையும் செயற்படுத்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.”

– இவ்வாறு எச்சரிக்கையுடன் வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்லே பச்செலெட் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் ‘புதுச்சுடர்’ இணையத்தளத்திடம் கருத்துத் தெரிவிக்கும்போதே கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளைச் செயற்படுத்த இலங்கை அரசு ஆரம்பகட்ட நடவடிக்கைகளை மட்டும் எடுத்தது. அதில் முன்னேற்றங்கள் எதுவும் காணப்படவில்லை. பல பரிந்துரைகள் இன்னமும் செயற்படுத்தப்படவில்லை. இதை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நீதியைக் கோரி நிற்கும் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாம் முழுமையான ஆதரவை வழங்குவோம்.

அதேவேளை, இலங்கை அரசுக்கும் எச்சரிக்கையுடன் ஒன்றைக்கூறிவைக்க விரும்புகின்றோம். அதாவது, கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பத்தைத் தவறவிடாது இனியாவது அரசு செய்ய வேண்டியதை செய்ய வேண்டும். இல்லையேல் பாரதூரமான பின்விளைவுகளை அரசு சந்திக்க வேண்டி வரும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *