ராகு காலத்தில் தேர்தல் திகதி அறிவிப்பு! கட்சிகள் கலக்கம்

இந்தியாவில் ராகு காலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதால் சில அரசியல் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன.

மத நம்பிக்கை உள்ளவர்கள் பொதுவாக ராகு கால நேரத்தில் நல்ல காரியங்களைத் தொடங்க மாட்டாட்டார்கள். பல்வேறு அரசியல் கட்சிகளும், கட்சிகளின் தலைவர்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

கூட்டணி அறிவிப்பைக் கூட நல்ல நாள், நேரம் பார்த்துதான் பல அரசியல் கட்சிகள் வெளியிடுகின்றன. கடந்த ஆண்டு தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் ஆன சந்திரசேகர ராவ், நல்ல நாள் பார்த்து டிசம்பர் 13-ம்  திகதியன்று பதவியேற்றார்.

முன்கூட்டியே தேர்தல் நடத்துவதற்கு வசதியாக நல்ல நாள் பார்த்து அந்த திகதிக்காக காத்திருந்து அதற்கேற்ற வகையில்தான் சட்டப்பேரவையை கலைக்க ஆளுநருக்கு சிபாரிசு செய்ய சந்திரசேகர ராவ் முடிவு செய்தார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆந்திர மாநிலம் பிரிவினைக்கு பின் மீண்டும் முதல்வராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடுவும் ஜோதிடர்கள் குறித்துக் கொடுத்த நேரத்தில் இரவு சரியாக 7.27 மணிக்கு பதவியேற்றார். முன்னாள் பிரதமர் தேவகவுடாவும் தனது குடும்ப ஜோதிடரை கலந்து ஆலோசித்த பிறகுதான் முக்கிய முடிவுகளை எடுப்பார்.

கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவும் ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான ராகு கால நேரத்தில் மாலை 5 மணிக்கு மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்புகளை தலைமை தேர்தல் ஆணையர் வெளியிட்டார்.

ராகு கால நேரத்தில் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டதால் பல கட்சிகள் கலக்கத்தில் உள்ளன. தென் மாநிலங்களைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் ராகு கால நேரத்தில் தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதற்கு பதிலாக வேறு நேரத்தில் வெளியிட வேண்டும் என்று விரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென் மாநிலத்தைச் சேர்ந்த ஆளுநர் ஒருவரும் இதையே விரும்பினார். ஆனாலும் திட்டமிட்டபடி, தேர்தல் ஆணையம் நேற்று மாலை 5 மணிக்கு ராகு கால நேரத்தில் தேர்தல் திகதியை வெளியிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *