வடக்கு ஆளுநர் ஜனாதிபதியின் முகவர்; தமிழருக்காக அவர் ஜெனிவா செல்வதா? – சுமந்திரன் எம்.பி. சீற்றம்

“ஜனாதிபதியின் பிரதிநிதியாக வடக்கு மாகாண ஆளுநர் ஜெனிவாவுக்குச் செல்வது தொடர்பில் தமிழ் மக்கள் விசனம் கொள்ளத் தேவையில்லை. ஜனாதிபதியின் முகவரான ஆளுநர் என்ன செய்வார் என்பது எமக்குத் தெரியும்.”

– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

“வடக்கு மக்களின் சார்பில் தான் ஜெனிவா செல்கின்றார் என்றும், வடக்கு மக்களின் கருத்தையே அங்கு வெளிப்படுத்தப் போகின்றார் என்றும் ஆளுநர் பேசக்கூடாது. அவ்வாறு பேசுவாராயின் மாற்று நடவடிக்கைளை நாங்கள் எடுக்க நேரிடும்” என்றும் சுமந்திரன் எம்.பி. எச்சரிக்கை விடுத்தார்.

யாழ். பிரதான வீதியிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

வடக்கு ஆளுநர் ஜெனிவா செல்லவுள்ளமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு மாகாண ஆளுநர் ஜனாதிபதியின் பிரதிநிதியாக ஜெனிவாவுக்குச் செல்வது குறித்து எமது மக்கள் விசனம் கொள்ளத் தேவையில்லை. அவர் எங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவரல்லர்.

அவர் ஜனாதிபதியால் நேரடியாக நியமிக்கப்பட்ட முகவர்தான். ஆகையினால் ஜனாதிபதியின் சொற்படிதான் அவர் நடப்பார்.

இதனால்தான் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு என்று நாங்கள் கேட்கின்றோம். அதனை நாங்கள் மட்டுமல்ல, தெற்கில் உள்ள ஏழு மாகாண சபைகளினதும் முதலமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட ஆளுநரிடம் உள்ள அதிகாரங்கள் முற்றுமுழுதாக நீக்கப்படவேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கின்றார்கள்.

ஏனென்றால் அதிகாரப் பகிர்வு என்பது மக்களிடம் கொடுக்கப்படவேண்டியதாக இருக்கின்றது. மக்களிடம் அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுப்பதாக இருந்தால் மக்கள் பிரதிநிதிகள்தான் அந்த அதிகாரத்தை உபயோகிக்கவேண்டும்.

ஜனாதிபதி நியமிக்கின்ற ஒருவர் அந்த அதிகாரங்களை உபயோகிக்க முடியாது. ஆகவே, வடக்கு ஆளுநர் அதனைச் செய்வதை நாங்கள் தடுக்க முடியாது.

ஏனெனில், அவர் ஜனாதிபதியின் முகவர். ஆனால், வடக்கு மக்கள் சார்பில்தான் இதனைச் சொல்கின்றேன் என்று அவர் பேசக்கூடாது. அப்படி அவர் பேசுவாராயின் மாற்று நடவடிக்கைகளை உடனடியாக நாங்கள் எடுக்க நேரிடும்.

இதேவேளை, இலங்கை ஏற்கனவே பொறுப்பேற்ற விடயங்களைத் துரிதமாகச் செய்து முடிக்கவேண்டும் என்று மக்கள்தான் சொல்லவேண்டும். மக்கள் அதனை அவரிடம் சொல்லவில்லை.

ஆகவே, மக்களிடம் கேட்டதாகச் சொல்லிவிட்டு யாரோ ஓரிருவர் சொல்வதைப் போய்ச் சொல்லப் போகின்றாரோ தெரியவில்லை.

ஆகவே, அவர் இவ்வாறு எதனையும் செய்ய முடியாது. இந்த விடயங்களில் மக்கள் தெளிவான ஆணையை எங்களிடம் கொடுத்து இருக்கின்றார்கள்.

ஆகையால் எங்கள் நிலைப்பாடு என்பது பொறுப்பெடுத்துக்கொண்ட விடயங்களை இலங்கை உடனடியாக நிறைவேற்றவேண்டும் என்பதுதான்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *