‘பட்ஜட்’ இறுதிநேரத் தாக்குதலுக்கு தயாராகின்றது மஹிந்த கூட்டணி! – முறியடிப்பு சமருக்கு ஐ.தே.கவும் வியூகம்

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு ஏப்ரல் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றத்தில் கடந்த 5 ஆம் திகதி ‘பட்ஜட்’ முன்வைக்கப்பட்ட நிலையில் 6ஆம் திகதி முதல் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. எதிர்வரும் 12ஆம் திகதி இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும்.

அதன்பின்னர் மார்ச் 13 ஆம் திகதி முதல் ஏப்ரல் 5 ஆம் திகதி வரை மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் (குழு நிலை விவாதம்) நடைபெற்று ஏப்ரல் 5ஆம் திகதி மாலை இறுதி வாக்கெடுப்பு நடைபெறும்.

‘பட்ஜட்’டுக்கு எதிராக வாக்களிக்கத் தீர்மானித்துள்ள மஹிந்த அணி, குழுநிலை விவாதத்தின்போது ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடுகள் மீது வாக்கெடுப்பு நடத்தப்படுமானால் அதற்கு ஆரவாக வாக்களிக்கவுள்ளது என அக்கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

ஜே.வி.பியும் ‘பட்ஜட்’டுக்கு எதிராக வாக்களிக்கவே தீர்மானித்துள்ளது.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவு – செலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களிக்கவுள்ளது.

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு இம்முறை 5 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாலும், மேலும் சில காரணங்களைக் கருத்தில்கொண்டே கூட்டமைப்பு இந்த முடிவை எடுத்துள்ளது.

அதேவேளை, ‘பட்ஜட்’டை தோற்கடிப்பதன் ஊடாக விரைவில் நாடாளுமன்றத் தேர்தலுக்குச் சென்று விடலாம் என மஹிந்த அணி கருதுகின்றது. இதற்கான பேச்சுகளும் திரைமறைவில் இடம்பெற்று வருகின்றன.

எனவே, பட்ஜட் மீது இறுதி வாக்கெடுப்பு முடியும் வரை வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என ஆளுங்கட்சி எம்.பிக்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். அதிருப்தி நிலையிலுள்ள பின்வரிசை எம்.பிக்களை சமரசப்படுத்தும் முயற்சியிலும் அவர் இறங்கியுள்ளார்.

சிலவேளை, பட்ஜட் தோல்வியடையும் பட்சத்தில், நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்குரிய யோசனையை ஜே.வி.பி. ஊடாகக் கொண்டுவருவதற்கு ஐ.தே.க. தயாராகி வருகின்றது எனவும் அறியமுடிகின்றது.

எனவே, பட்ஜட் கூட்டத்தொடர் முடிவடையும் வரை தெற்கு அரசியல் களம் பரபரப்பாகவே காணப்படும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *