காஷ்மீர் எல்லையில் எகிரும் துருவங்கள்!

தெற்காசியாவில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவு என்பது கீரியும் பாம்பும் என்ற நிலையிலேயே நீடித்து வருகின்றது.

குறிப்பாக சனத்தொகையிலும், பரப்பளவிலும் பேசும் மொழிகளிலும் முன்னிலையில் திகழும் இந்தியா, அதன் அயல் நாடான பாகிஸ்தானை பரம எதிரியாகவே பார்க்கின்றது.

தெற்காசியாவிலுள்ள ஏனைய நாடுகளை நேர்கொண்ட பார்வையில் பார்த்தாலும், இஸ்லாமபாத் மீது சந்தேகப ;பார்வையையே டில்லி செலுத்துகின்றது.

பாகிஸ்தான் மீது தொடர்ச்சியாக பயங்கரவாத முத்திரை குத்தப்படுகின்றது. மறுபுறத்தில் பாகிஸ்தானும் முட்டிமோதுவதற்கு தயார்நிலையிலேயே இருக்கின்றது. இதனால் அண்மையில்கூட பிராந்தியத்தில் கடும்; போர்ப்பதற்றம் நீடித்தது.

போருக்கான அபாய சங்கு ஊதப்பட்டிருந்தாலும் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள், உலக நாடுகள் அவசர தலையீடுகளை மேற்கொண்டதால் இரு நாடுகளும் பின்வாங்கின.

#இன்று_நேற்று_அல்ல

1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இவ்விரு நாடுகளுக்குமிடையில் போர்ப்பதற்றம் நீடித்து வருகின்றது. 1947 – 1948 இல் இரு நாடுகளுக்குமிடையே எல்லை மீதான போர் என்று உதயமான முதலாவது போர், காஷ்மீர் சமராகும்.
1947 ஒக்டோபரில் முஸ்லிம் பழங்குடியினரால் நடத்தப்பட்ட தாக்குதலானது மஹாராஜா ஹரி சிங் இந்தியாவிலிருந்து உதவி பெறவும், காஷ்மீர் கைச்சாத்து கையெழுத்திடவும் தூண்டியது.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் தீர்மானம் 47 நிறைவேற்றிய பின், இந்தியா (காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு, லடாக்) உட்பட மூன்றில் ஒரு பகுதியை தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்துள்ளது.
அதேசமயம் பாகிஸ்தானின் காஷ்மீர் (ஆசாத் காஷ்மீர் மற்றும் கில்கிட் – பால்டிஸ்தான்) மூன்றில் ஒரு பங்கைப் பெற்றது.

ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஊடுறுவலானது இந்தியாவின் ஆட்சிக்கு எதிரான எழுச்சியையும்; தோற்றுவிக்கும் தளமாகியது.
இதன் பின்னர் மேற்கு பாகிஸ்தான் மீது முழு அளவிலான இராணுவத் தாக்குதலைத் தொடுத்ததன் மூலம் இந்தியா பதிலடி கொடுத்தது.

இப்படியே ஆண்டாண்டு காலமாக பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்குமிடையே போர்கள் இடைவிடாது தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. இப்படியாக இடம்பெற்ற போர்களை வரிசைப்படுத்தினால் 1965 இல் இந்திய – பாகிஸ்தான் போர் பல நிகழ்வுகளால் தூண்டிவிடப்பட்டது. பதற்றங்கள் அதிகமாக இருந்ததால், 1965 ஒகஸ்டில் உள்ளக விளையாட்டினை ஆரம்பித்த பாகிஸ்தான் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. மேற்கு பாகிஸ்தானில் முழு இராணுவத் தாக்குதலுடன் இந்தியா தனது பலத்தை நிரூபிக்க, இந்த யுத்தம் 17 நாட்கள் மாத்திரமே நீடித்தது. என்றாலும், அது ஆயிரக்கணக்கான மரணங்களை விளைவித்தது.

குறித்த யுத்தமானது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இடம்பெற்ற மிகப்பெரிய யுத்தமாகும்.
மேலும், 2011, 2013, 2014, 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளிலும் வன்முறை தொடர்ந்த வண்ணமே இருந்தன. காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் வன்முறை மோதல்களில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் 2016 ஜூலையில் முழு சக்தியாக்கிரகப் போராட்டத்தைத் தொடங்கியும் உள்ளனர்.

#உக்கிரநிலை

இவ்வாறு வலுத்துக்கொண்டிருக்கும் இந்திய – பாகிஸ்தான் போராட்டமானது புல்வாமா தாக்குதலின் பின்னர் 2019 பெப்ரவரில் உக்கிரநிலையை அடைந்தது.
இச் சந்தர்ப்பத்தில் சவூதி அரேபிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு தனது உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு இரு நாடுகளுடன் தமது நாட்டின் சமரச நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.

இப்படியான நிலைமையில் அவரின் பயணத்தின் வெளிப்பாட்டால் யுத்தம் நிறைவுக்கோ அல்லது மந்தகதிக்கோ வந்த பாடில்லை. அவரது பயணம் பொருளாதார ரீதியிலான வடிவத்தை கொண்டமைந்திருந்தாலும் ‘பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிய கதைதான்” பலத்த பாதுகாப்புடனும் அதிகூடிய வரவேற்புடனுமேயே முஹம்மத் பின் சல்மான் இரு நாடுகளிலும் வரவேற்கப்பட்டார்.

இது ஒருபுறமிருக்க இவ்வளவு விடயங்கள் அரங்கேறியும் காஷ்மீர் எல்லைப் பரப்பில் இந்திய இராணுவங்களின் அட்டூழியங்கள் வலுத்தாதகவே இருந்தன என்று பல தரப்பினரும் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர். இச்சமயத்தில் பாகிஸ்தானின் பலமும் குன்றியதாக இல்லை. அவர்களும் பதிலடியாகப் பல வழிமுறைகளைக் கையாண்டனர்.
இருந்த போதிலும் வலுக்கும் இவ்விடயங்கள் சகல வழிகளிலும் திரிவுபடுத்தப்பட்டு அந்தந்த நாட்டு ஊடகங்கள் அவர்களுக்கு ஆதாரவான கருத்துக்களை கூறுகின்றமை வேடிக்கையாக உள்ளது.

அண்மையில் சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவினால் பாகிஸ்தானின் காஷ்மீர் எல்லை மீது ஏவப்பட்ட ‘ஜெட்’ விமானமொன்று பாக். படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அச் சமயம் தனது நுணுக்கங்களால் தப்பித்த அபிநந்தன் எனும் விமானி பாக். படையினரால் கைது செய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்டது முதல் பல ஊகங்கள் வெளியாகின. தொடர்ந்து பாக். பிரதமர் இம்ரான்கான் தனது பொதுமன்னிப்பின் கீழ் குறித்த கைதியை இந்திய அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

இந்த விடயம் உலக அளவில் பேசப்படுகின்ற ஒரு பாரிய விடயமாக மாறியது. தனது நாட்டினை சின்னாபின்னமாக்க அயல் நாடு எத்தனித்த போதிலும், தங்களிடம் வசமாக சிக்கிக் கொண்ட குறித்த படைவீர விமானியை கொல்லாமல் அவருக்கு சிகிச்சையளித்து உரிய நாட்டிடம் ஒப்படைத்தமை மெச்சத்தக்க விடயமே.

ஆனாலும், அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைக்க பாக். ஒரு சில நாட்களை தன்னகத்தே வைத்திருந்த போதிலும், குறித்த விடுதலையால் இந்திய இராணுவத்தினரிடம் பலவித சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் மூலம் அறியமுடிகின்றது.

இது மனிதாபிமானத்தினால் இடம்பெற்ற நிகழ்வாகக் கருதப்பட்ட போதிலும் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டமையின் உள்ளக காரணங்கள் குறித்தும், இராணுவ இரகசியங்கள் குறித்தும் இந்திய இராணுவம் குழப்பத்தில் உள்ளதாக அறியமுடிகின்றது.

ஆனாலும், அபிநந்தனை விடுதலை செய்த பாகிஸ்தான் குறித்த நபரின் விடுதலை மூலம் தனது நாட்டின் மனிதநேய தன்மையை முழு உலகுக்கும் வெளிக்கொணர்ந்துள்ளமை தற்போதைய பேசு பொருள்.

பலத்த பாதுகாப்புடனேயே அபிநந்தன் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டார். இச் சம்பவம் இந்தியா அரசு, இராணுவம் உட்பட முழு உலகமே வியக்கும் அளவுக்குப் பெறுமதி வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.
பாக். எல்லையில் சுட்டுவீழ்த்தப்பட்ட விமானத்தில் இருந்து தப்பிய அபிநந்தன் பரசூட் மூலம் கீழிறங்கிய போது அவரைக் கண்ட பாகிஸ்தான் ஹெலோன் விலேஜைச் சேர்ந்த ஒருவர் வழங்கிய தகவலின்படி, பரசூட் மூலம் ஒருவர் தரை இறங்கியதை தான் அவதானித்ததாகவும், அச் சமயம் தான் வயது முதிர்ந்தவர் என்பதால் தன்னால் மேற்கொண்டு எதுவும் பயணிக்க முடியாத நிலையில் இளைஞர்களை அழைத்து குறித்த நபரை சுற்றி வளைத்ததாகவும் தெரிவித்தார்.

இச் சந்தர்ப்பத்தில் அபிநந்தன் பாக். எல்லையில் வைத்து “நான் இப்போது இருப்பது இந்தியாவிலா? அல்லது பாகிஸ்தானிலா?” என்ற வினாவினை எழுப்பியுள்ளார்.

இதன்போது பாக். படையினர் அபிநந்தனை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கைதுசெய்தனர். அதனையடுத்தே குறித்த நபர் பாக். பிரதமரால் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.

இரு நாடுகளும் தொழில்நுட்பத்தில் வளர்ச்சி கண்டுள்ள நிலையில், குறித்த விமானியின் விடுதலை சில வேளை ஆய்வுக்கான தளமாக இருக்குமோ என்கின்ற சந்தேகம் இதுவரையிலும் இந்தியாவுக்குண்டு. அதாவது சில வேளை இரகசிய பதிவை மேற்கொள்ளும் தொழில்நுட்மாக ‘சிப்’ வகைகள்; ஏதும் இவரது உடலில் பொருத்தப்பட்டிருக்குமோ? அல்லது ‘ஜீ.பி.எஸ்’ மூலமான உள்ளீடுகள் வைக்கப்பட்டிருக்குமோ என்ற ஐயம் இந்திய இராவணத்திரிடம் உள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

மேலும், இப் பிரச்சினை அரசியல் திருவிளையாடல்களுக்காக அரங்கேறுகின்ற ஒரு திரிவு மூலமா? என்கின்ற கேள்வியும் பலவிதங்களில் எழுகின்றது.

எது எப்படியோ ஆண்டாண்டு காலமாக வலுத்து நிற்கின்ற இந்தியா – பாகிஸ்தான் எல்லை பிணக்கு இன்றோ அல்லது நாளையோ நிறைவு பெறும் விவகாரமாகத் தெரியவில்லை. இது நீண்டு கொண்டு செல்லும் ஒரு சங்கிலித் தொடராகவே பார்க்கப்படுகின்றது.

– கியாஸ் ஏ. புஹாரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *