புனித பூமியில் ‘நைட் பசார்’! ‘பைட்’டுக்காக இறைச்சி…! வேலுகுமார் கண்டனம்

கண்டி மாநகரில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய போக்குவரத்து முறைமையால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்தும்,  இரவு நேர சந்தைத் திட்டத்தால் ( நைட்பசார்) புனித பூமியாகக் கருதப்படுகின்ற தலதாமாளிகைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் – களங்கம் தொடர்பிலும் பாராளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார் வேலுகுமார் எம்.பி.

இதையடுத்து பொருத்தமற்ற இவ்விரண்டு திட்டங்களையும் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சபை முதல்வர் லக்‌ஷ்மன் கிரியல்ல, புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா ஆகியோர் உறுதியளித்தனர்.

பாராளுமன்றம் இன்று (08) வெள்ளிக்கிழமை பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது.

தினப்பணிகள் முடிவடைந்தப்பின்னர் ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான வேலுகுமார்,

” மத்திய மாகாண ஆளுநரால், கண்டி மாநகரில் – தன்னிச்சையான முறையில் புதிய வீதிபோக்குவரத்து முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ( பிரதான வீதிகளில் ‘வன்வே’ திட்டம்) இதனால் முழு கண்டி நகரமும் தலைகீழாக மாறியுள்ளது. சாரதிகளும், மக்களும் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். கடும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளனர்.

அதுமட்டுமல்ல ,  புனித பூமியாகக் கருதப்படுகின்ற தலதாமாளிகை வளாகத்தில் கடந்த காலத்தில் ‘நைட்கார் ரேஸ்’  நடத்தப்பட்டது. தற்போது அதேபாணியில் ‘நைட் பஸார்’ ( இரவுநேர சந்தை) திறக்கப்பட்டுள்ளது.

அங்கு நடைபெறும் சில சம்பவங்கள் வரலாற்று சிறப்புமிக்க இடமாகக் கருதப்படுகின்ற கண்டி நகரின் தன்மைக்கு – தொன்மைக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.” என்று சுட்டிக்காட்டினார்.

இதற்கு  பதிலளித்த சபை முதல்வரும், சபை முதல்வரும், அரச தொழில்முயற்சி, கண்டி மரபுரிமைகள், மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியல்ல,

” கண்டி நகருக்குரிய போக்குவரத்து அதிகாரம் மாநகரசபை வசமே இருக்கின்றது. ஒத்திகைப்பார்க்கப்பட்டுள்ள புதியமுறை தோல்விகண்டுள்ளது. எனவே, பழைய நடைமுறையை பின்பற்றுமாறு மாநகரச முதல்வருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வரலாற்று சிறப்புமிக்க தலதாமாளிகை வீதியில், மத்திய அரசு, நகரசபை ஆகியவற்றுக்குகூட அறிவிக்காமல் வாரம் ஒருமுறை  ‘நைட் பசார்’ திறக்கப்படுகின்றது. ‘பைட்’டுகாக இறைச்சி சுடப்படுகின்றது. ( பதனிடல்)

எங்கிருந்தோ தீடீரென கண்டிக்கு வந்த நபர் (ஆளுநர்) வேறு மாகாணங்களில் அமுல்படுத்திய திட்டங்களை இங்கு  செயற்படுத்த  முற்படுகிறார். கண்டி இராஜ்ஜியத்தின் கலை, கலாசாரம், புனிதம் தெரியாதவர்களே இத்தகையவர்கள்.

அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். திட்டத்தை கைவிடுமாறும் விலயுறுத்தியுள்ளனர்.” என்றார் அமைச்சர் கிரியல்ல.

அதன்பின்னர் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா,

” புனித பூமியில் இப்படி நடப்பது அபகீர்த்தியான விடயமாகும். தலதாமாளிகைக்கு முன்னால் முன்னர் கார்பந்தயம் நடத்தினர். எனவே, புனிதமான இடத்தை அவமதிப்பதற்கு இடமளிக்கபடாது. இது தொடர்பில் எனக்கும் பல முறைப்பாடுகள் வந்துள்ளன.” என்றார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *