ஐ.நா. தீர்மானத்தை இலங்கை நடைமுறைப்படுத்த அழுத்தம் தொடரும் என்கிறார் அமெ. தூதுவர்!

“இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக இருக்கின்றது. அதற்கான அழுத்தத்தைத் தொடர்ந்தும் இலங்கைக்குக் கொடுத்து வருகின்றோம்.”

– இவ்வாறு அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிடஸ் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு விஐயம் மேற்கொண்ட இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியியலாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டமையுடன் அமெரிக்க அரசின் நிலைப்பாடுகள் தொடர்பிலும் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இங்குள்ள மக்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகளை நேரடியாகப் பார்த்தும் அறிந்தும் கொண்டிருக்கின்றோம். இந்த விடயங்கள் தொடர்பில் அரசுடன் பேசுவதற்கும் இருக்கின்றோம்.

இங்கு வந்து நிலைமைகளை அறிந்துகொண்டதற்கமைய இங்குள்ள மக்களைப் பாதிக்கும் விடயங்களை அரசுடன் பேசி எங்கள் பணிகளையும் தொடர உதவியாக அமைந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு தொடர்பில் பேசப்படுகின்றது. அந்தப் பேரவையின் உறுப்பு நாடுகளில் இருந்த அமெரிக்கா வெளியேறியிருக்கின்றது. ஆனாலும், அமெரிக்காவைப் பொறுத்தவரை அந்தப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30.1 மற்றும் 34.1 ஆகிய இரண்டு தீர்மானங்களையும் இலங்கை அரசு அமுல்படுத்த வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதனை இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாவே இருக்கின்றோம்.

ஆயினும். அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசு மெத்தனப் போக்கைக் கடைப்பிடிக்கின்றது. மிக மிக மந்த கதியிலேயே அந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. அதிலும் நாம் எதிர்பார்த்ததையும் விட மெதுவாகவே அது நடக்கின்றது.

அவ்வாறு இருந்தாலும் அதனை இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாகவே உள்ளோம்.

குறிப்பாக காணாமல்போனோர் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. அந்த அலுவலகத்திலும் முன்னேற்றமில்லை. எல்லாமே மெதுவாகவே நடக்கின்றன. ஆகவே, அந்தப் பணிகள் நடைபெற வலியுறுத்தி எங்கள் உதவிகளையும் நாங்கள் வழங்குவோம்.

உதவி என்பது பல வழிகளில் இருக்கின்றது. அரசியல் ரீதியான உதவிகளில் இலங்கை முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் வெற்றியளிக்க வேண்டும். சுயாதீனமானதும் நிரந்தரமானதுமான ஆணைக்குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பது மிக முக்கியமானது. இதற்கமைய குறிப்பாக காணாமல்போனோர் விடயத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பது கட்டாயம்.

மேலும், இந்த மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும், பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய வேண்டும். அதற்காக அமெரிக்கா அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *