இந்திய திரைப்படங்களுக்கு பாகிஸ்தானில் தடை!

இந்தியா சார்ந்த நிகழ்ச்சிகளை பாகிஸ்தான் நாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப இருந்த தடையை அந்நாட்டு நீதிமன்றம் மீண்டும் அமுல்படுத்தியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவிவரும் வேளையில் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் திரைப்படங்கள் பாகிஸ்தான் திரையரங்குகளில் வெளியாகாது என ஏற்கனவே அந்நாட்டு திரைப்பட ஒளிபரப்பு அமைப்பு அறிவித்திருந்தது.

பாகிஸ்தான் மின்னூடக ஒழுங்குமுறை ஆணையம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த, மூன்று நீதிபதிகளை கொண்ட பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற அமர்வு, அடுத்த விசாரணை நடைபெறும் வரை இத்தடை நீடிக்கும் என்று கூறியுள்ளது.

பாகிஸ்தான் மின்னூடக ஒழுங்குமுறை ஆணையத்தின் 2006ஆம் ஆண்டு கொள்கைப்படி, உள்ளூர் சேனல்களில் 10 சதவீத வெளிநாட்டு உள்ளடக்கங்களை (இந்தியா உள்பட) ஒளிபரப்ப அனுமதியுள்ளது.

2016ம் ஆண்டு பதான்கோட் தாக்குதலின் பின்னணியில், இந்திய உள்ளடக்கம் உடைய நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப பாகிஸ்தான் மின்னூடக ஒழுங்குமுறை ஆணையம் ஒட்டுமொத்த தடை விதித்தது.

பின்னர், இந்த தடைக்கு எதிராக லாகூர் உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கால் அது நீக்கப்பட்டது. பாகிஸ்தான் மின்னூடக ஒழுங்குமுறை ஆணையம் விதித்த தடை சட்டபூர்வமற்றது என்றும் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று லாகூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராக பாகிஸ்தான் மின்னூடக ஒழுங்குமுறை ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, தற்காலிக தடை விதிப்பதாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில், புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானின் தலையீடு இருப்பதாக இந்தியா குற்றஞ்சாட்டிய பின்னர், பாகிஸ்தானின் டி20 கிரிக்கெட் போட்டியின் அதிகாரபூர்வ தயாரிப்பில் இருந்து இந்திய நிறுவனம் ஒன்று வெளியேறியது. பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி இந்தியாவில் ஒளிபரப்பு செய்யப்படுவதும் தடை செய்யப்பட்டது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *