கிழக்கில் தமிழர்களின் இருப்புக்குப் பேராபத்து! – எச்சரிக்கின்றார் வியாழேந்திரன்

“எங்கள் இனம் இன்னொரு இனத்திடம் கையேந்தும் நிலையை நாமே ஏற்படுத்துகின்றோம்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பு பேராபத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. இந்நிலையில் தமிழர்களை நேசிக்கின்ற தமிழ்த் தலைமைகளுடன் இணைந்து செயற்படுவதற்குத் தயாராகவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

“கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பானது பேராபத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. நல்லிணக்கம் என்ற பெயரில் தமிழர்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றனர்.

சிலருக்கு இதைச் சொல்வதற்குப் பயம். காரணம் தங்கள் நல்லிணக்க உறவுகள் கெட்டு விடும் என்பதாலாகும்.

தங்கள் உறவுகளைப் பற்றி மட்டுமே சிந்திக்கின்றனரே தவிர தங்கள் இனம் சார்ந்து சிந்திக்கின்ற தன்மை இல்லாமல் போய்விட்டது.

ஓர் இனத்தின் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்கான நான்கு தூண்களாக இருப்பவை நிலம், மொழி, கல்வி மற்றும் பொருளாதார, பண்பாட்டு அம்சங்கள் போன்றவையாகும்.

இந்த நான்கு தூண்களையும் நாங்கள் பாதுகாக்கவேண்டும். ஆனால், கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின்
நிலம், தமிழர்களின் கல்வி, மொழி, பண்பாடு, பொருளாதாரம் ஆகிய நான்கு தூண்களிலும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றன. தமிழர்கள் தங்கள் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்குப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணம் இன்று முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சராக நாட்டின் பிரதமரே இருக்கும்போது கிழக்கு மாகாணம் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தையும் இங்குள்ள தமிழ் மக்களையும் வளங்களையும் எங்களது உயிருக்கும் மேலாக நாம் நேசிக்கின்றோம். எனவே, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலானாலும் கிழக்கில் உள்ள தமிழர்களை நேசிக்கும் தமிழ்த் தலைமைகளுடன் இணைந்து செயற்படுவதற்கு நாங்கள் தயாராகவிருக்கின்றோம். நான் பிரதேச வாதம் பேசவில்லை. ஆனால், எமது மாகாணம் பாதுகாக்கப்பட வேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *