‘சிவராத்திரி வளைவு’ அடித்துடைப்பு: தமிழ்க் கூட்டமைப்பு கடும் கண்டனம்!

“இந்து மக்களின் புனித தினமான மகா சிவராத்திரி விரதத்தின் முதல் நாளன்று ஐந்து ஈஸ்வரங்களில் ஒன்றான புனித பூமி திருக்கேதீஸ்வரத்தில் அலங்கார வளைவு அடித்துடைக்கப்பட்டிருப்பது மிகுந்த மனவேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் கண்டனத்துக்குரிய ஒரு செயலாகும்.”

– இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சோ.சேனாதிராஜா.

சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மன்னாரில் அமைக்கப்பட்டிருந்த வளைவை சில கத்தோலிக்கர்கள் வன்முறையூடாக அகற்றியமை தொடர்பில் கண்டன அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு அவர் அனுப்பியுள்ளார்.

அவரது கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-

“சைவ மக்கள் திருக்கேதீஸ்வரத்தில் சிவராத்திரிக்கு முதன் நாளே இலட்சக்கணக்கில் குவிந்து விடுவர்.

சிவராத்திரியில் சிவனை இதயத்தில் வைத்துக் கண்விழித்து வழிபாடாற்றி அடுத்த நாள் விடிந்ததும் பாலாவி ஆற்றில் நீராடியபின் சிவனை வழிபட்டு வீடு திரும்பும் சைவ மக்கள் ஆன்மீக பேறுபெறும் திருத்தலம் திருக்கேதீஸ்வரம்.

அந்தப் புனித பூமியில் நிகழ்ந்த இக் கொடுஞ்செயலால் ஏற்பட்ட பதற்ற நிலையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்; வேதனையடைகின்றோம்.

இச் செயல் இந்து – கிறிஸ்தவ மக்களிடம் வன்முறையையும் பிளவையும் எதிர் விளைவுகளையும் ஏற்படுத்தி விடும் கொடிய செயலாகும். இச்செயற்பாடுகள் தொடர அனுமதிக்க முடியாது.

இச் செய்தி கிடைத்ததும் திருக்கேதீஸ்வர நிர்வாகிகளுடனும் இந்துக் குருக்கள்மாருடனும் கலந்து பேசினோம். மன்னார் ஆயர் கொழும்பில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. அதனால் அவருடன் பேச முடியவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சம்பவம் இடம்பெற்ற மாந்தைச் சந்திக்கும் திருக்கேதீஸ்வரப் பிரதேசத்திற்கும் சென்று சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் பேசியுள்ளார். அமைதியைப் பேண முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இத்தகைய சம்பவங்கள் அதுவும் இந்து – கிறிஸ்தவ மத நம்பிக்கை கொண்டு வாழும் மக்களிடையே பிளவை ஏற்படுத்த இடமளித்துவிடாமல் அனைத்து நீதியான சமாதான நடவடிக்கைகளையும் எடுக்க அனைவரும் உதவி ஒத்துழைக்க வேண்டும்.

மன்னார் ஆயர் மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்களும் சைவக் குருமார் தலைவர்களும் உடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நாம் உதவ வேண்டும்.

பௌத்த ஆதிக்கத்திற்கும் தமிழ் இன அடக்குமுறைக்கும் ஆளாகியிருக்கும் தமிழ் மக்களின் விடிவுக்கும் விடுதலைக்கும் எம்மிடையே நல்லிணக்கம் மிக அவசியமாகும். இவை பாதுகாக்கப்பட வேண்டும். இன்றைய தேவை அதுவேதான் என்பதை வற்புறுத்தி நிற்கின்றோம்” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *