பக்க நிகழ்வுகளில் கொக்கரித்துவிட்டு கூட்டமைப்பு மீது பழிபோடக் கூடாது! – மாவையின் காலை உரை இது

“இலங்கை அரசுக்கு நாம் கால அவகாசத்தைப் பெற்றுக் கொடுத்துவிட்டோம் என்று கூறுகின்றனர். அப்படிச் சொல்பவர்கள் முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ளவேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பிரதிநிதித்துவம் இல்லை. அங்கு உறுப்பினர்களாக உள்ள நாடுகளே அதனைத் தீர்மானிக்கின்றன. இவ்வாறானதொரு நிலையில் இங்கிருந்து செல்லும் சிலர், அங்கு பக்க நிகழ்வுகளில் கொக்கரித்துவிட்டு, இங்கு பத்திரிகைகளுக்குச் செய்தி கொடுக்கின்றனர்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தார்.

தெல்லிப்பழை மருத்துவமனையில் மருத்துவர்களுக்கான விடுதி, ஒட்சிசன் வழங்கும் நவீன ஆய்வு கூடம் என்பவற்றைத் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்றுக் காலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கை ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆனால், ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள், தீர்மானத்துக்கு கட்டுப்பட்டுச் செயற்படவேண்டும் என்று இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு கால அவகாசம் கொடுங்கள் என்று நாம் ஒருபோதும் கேட்டதில்லை. அவ்வாறு சொன்னதும் இல்லை. ஆனால், இங்குள்ள சிலர் நாம் கால அவகாசம் பெற்றுக் கொடுத்துவிட்டோம் என்று கூறுகின்றார்கள். அறிக்கை விடுகின்றார்கள்.

அவர்கள் முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ளவேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பிரதிநிதித்துவம் இல்லை. அங்கு உறுப்பினர்களாக உள்ள நாடுகளே இதனைத் தீர்மானிக்கின்றன.

இங்கிருந்து செல்லும் சிலர் அங்கு ஓரமாக அறைகளில் கொக்கரித்துவிட்டு தங்கள் பேச்சுக்களும் அங்கு எடுபட்டதாக நினைத்து ஊடகங்களுக்குச் செய்தி கொடுக்கின்றனர்.

இலங்கை அரசு போர்க்குற்ற விசாரணை உள்பட பல விடயங்களைச் செய்வதாக உறுதியளித்தே ஐ.நா. தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இலங்கையை ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்லவேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். அது முடியுமா? வீட்டோ அதிகாரம் உள்ள நாடுகளில் சீனாவும் இருக்கின்றது. அதனைத் தாண்டி செயற்பட முடியுமா? இவர்கள் சொல்வது போல நடந்து கொண்டால், இலங்கை அரசு ஐ.நா. தீர்மானத்திலிருந்து விலகி முழு வெற்றியடைந்து விடும்.

ஒரு நாட்டுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படும்போது உலக நாடுகள் ஏற்றுக் கொள்கின்றது என்றால் அதன் அர்த்தத்தை நாங்கள் விளங்கிக் கொள்ளவேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *