268 கிராம் எடையுடன் பிறந்த உலகின் மிகச்சிறிய குழந்தை!

ஜப்பானில் கிட்டதட்ட கால் கிலோ அளவில், 268 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உயிர்பிழைத்தது. தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளது.

உலகின் மிகச்சிறிய குழந்தை என இந்த ஆண் குழந்தை நம்பப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் மருத்துவமனையின் அவசர பிரிவில் சிசேரியன் மூலம் பிறந்த குழந்தை மிகவும் சிறியதாக இருந்தது. கைக்குள் அடங்கிவிடும் அளவுக்குத்தான் குழந்தை இருந்தது.

பிறந்தது முதல் கடந்த மாதம் வரை குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் தான் இருந்தது.

24 வார கருவாக இருந்தபோது பிரசவிக்கப்பட்ட இந்த ஆண் குழந்தை, கிட்டதட்ட ஐந்து மாதங்களுக்கு பின்னர் மருத்துவனையில் இருந்து சிகிச்சை மூலம் தேறியுள்ளது.

தற்போது அந்த குழந்தை 3.2 கிலோ எடையுடன் உள்ளது. உணவும் ஊட்டப்படுகிறது.

”என் மகன் பிழைப்பான் என எனக்கு நம்பிக்கை இருக்கவில்லை. அதுதான் உண்மை. ஆனால் தற்போது இவ்வளவு பெரிதாக வளர்ந்துவிட்டான். இப்போதுதான் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்,” என அக்குழந்தையின் தாய் கூறியதாக டோக்கியோவின் கெய்ரோ பல்கலைகழக மருத்துவமனை தெரிவிக்கிறது.

இந்த குழந்தைக்கு சிகிச்சையளித்த மருத்துவர் டகேஷி அரிமிட்சு பிபிசியிடம் பேசியபோது

” லோவா பல்கலைகழகத்திடம் இருக்கும் உலகின் மிகச்சிறிய குழந்தைகள் குறித்த தரவுகளின்படி உலகின் மிகச்சிறிய குழந்தை, சிகிச்சையின் மூலம் வெற்றிகரமாக உயிர்பிழைத்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளது,” என்றார்.

”அளவில் மிகச்சிறியதாக பிறக்கும் குழந்தைகளும் நல்ல உடல்நலனுடன் மருத்துவமனையில் இருந்து வெளியேறமுடியும். அதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்பதை காட்ட விரும்பினேன்,” என்றார் மருத்துவர் டகேஷி அரிமிட்சு.

முன்னதாக 274 கிராம் அளவில் ஜெர்மனியில் பிறந்த குழந்தையொன்றுதான் மிகச்சிறியதாக இருந்தது. கடந்த 2015-ம் ஆண்டு ஜெர்மனியில் பெண் குழந்தை 252 கிராம் எடையுடன் பிறந்து உயிர் பிழைத்தாக செய்திகள் வெளியானது.

பொதுவாக ஒரு கிலோ எடைக்கு கீழ் ஜப்பானில் பிறக்கும் குழந்தைகளில் 90% உயிர்பிழைத்துவிடும். ஆனால் 300 கிராமுக்கு கீழ் பிறக்கும் குழந்தைகளில் 50% மட்டுமே உயிர் பிழைக்கின்றன என கியோ பல்கலைக்கழக மருத்துமனை தெரிவித்துள்ளது.

மிகவும் சிறிய அளவில் பிறக்கும் குழந்தைகளை பொருத்தவரை பெண் குழந்தைகளை ஞவிட ஆண் குழந்தைகள் பிழைக்கும் வீதம் குறைவு. இதற்கு மருத்துவ நிபுணர்களால் சரியான விளக்கம் கூற முடியவில்லை.

ஆனால், ஆண் குழந்தைகளுக்கு நுரையீரல் வளர்ச்சி மெதுவாக இருக்குமென்பதற்கும் இதற்கும் தொடர்பு இருக்கக்கூடும் என சில மருத்துவர்கள் நம்புகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *