ஜனாதிபதிக்கு எதிராக வாக்களியோம்! ஐ.தே.கவின் பின்னிலை எம்.பிக்களை சாடுகிறார் இராதா!!

2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு எதிராக தமிழ் முற்போக்கு கூட்டணி  வாக்களிக்காது என்று விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் இன்று ( 03) தெரிவித்தார்.

தலவாக்கலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” பட்ஜட்டில் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு எதிராக வாக்களித்து அதை தோற்கடிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக்கட்சியின் பின்வரிசை எம்.பிக்கள் சிலர் கருத்து வெளியிட்டுவருகின்றனர். இது ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து அல்ல.

கடந்தகாலங்களில் ஜனாதிபதி பதவியை வகித்தவர்கள், தங்கள் செலவினங்களுக்காக கோடிக்கணக்கான ரூபாய்களை ஒதுக்கிக்கொண்டனர். எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அப்படியான நபர் கிடையாது.

அத்துடன், ஐ.தே.கவின் பின்வரிசை எம்.பிக்கள் சிலரின் இத்தகைய செயற்பாடானது, ஐனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் அரசியல் ரீதியில் முறுகலை ஏற்படுத்தும்.

எனவே இந்த நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நாம் செயற்பட வேண்டும். நாங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற வகையில் அப்படியே செயற்படுகின்றோம்.

ஐனாதிபதியும் பிரதமரும் ஒன்றாக பயணித்தால் மாத்திரமே நாட்டின் அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியும்.” என்றார்.

அதேவேளை, ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடுகளுக்கு எதிராக ஐ.தே.கவின் பின்னிலை எம்.பிக்கள் வாக்களிப்பார்கள் என்று முஜிபூர் ரஹ்மான் நேற்று அறிவித்திருந்தார்.

க.கிசாந்தன்

(பத்தனை – நிருபர்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *