மீண்டும் மீறப்படும் பிரதமரின் வாக்குறுதி! வடக்கில் ஏழு சிங்களவர் சாரதிகளாக நியமனம்!!

வடக்கு மாகாணத்திலுள்ள 4 மாவட்ட செயலகங்களுக்கு ஒரே நாளில் சிங்கள இளையோர் இரகசியமாக சாரதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கில் சிங்களவர்களை சிற்றூழியர்களாக, சாரதிகளாக நியமிக்கமாட்டோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதி மீண்டும் மீறப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கொழும்பு அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிலுள்ள திணைக்களங்களுக்கு சிற்றூழியர்களாக, சாரதிகளாக தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள இளைஞர்கள் கடந்த காலங்களில் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்தியிருந்தது.

தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் வடக்கு, கிழக்கில் நியமிக்கப்பட மாட்டார்கள் என்று பிரதமர் உறுதியளித்திருந்தார்.

பிரதமரின் உறுதிமொழியை மீறி கடந்த காலங்களிலும் சிங்களவர்கள் சிற்றூழியர்களாகவும், சாரதிகளாகவும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நடவடிக்கை தற்போதும் தொடர்வதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

கடந்த 25ஆம் திகதி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டச் செயலகங்களுக்கு தென்பகுதியைச் சேர்ந்த 7பேர் சாரதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதே மாவட்ட செயலகங்களில் வடக்கைச் சேர்ந்த பலர் அமைய அடிப்படையில் பணியாற்றும் நிலையில் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *