மிடுக்கான நடையுடன் இந்திய எல்லைக்குள் இன்றிரவு அடியெடுத்துவைத்தார் அபிநந்தன்!

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை வாகா எல்லையில் பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் இந்தியாவிடம் ஒப்படைத்தனர்.

இது தொடர்பில் இந்திய ஊடகமான ‘தினத் தந்தி’ இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில்,

கடந்த மாதம் 27ஆம் திகதி இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானத்தை புறமுதுகிட்டு ஓடச் செய்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் எல்லையில் துரதிஷ்டவசமாக பரசூட்டில் இறங்கினார்.

பாகிஸ்தான் மேஜரின் கேள்விக்கு வீரமாகவும், விவேகமாகவும் பதிலளித்தார். விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கிய சம்பவம் உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்தது.

இதனையடுத்து இந்தியா மற்றும் மற்ற உலக நாடுகளின் அழுத்தத்தைத் தொடர்ந்து இந்திய விமானி அபிநந்தனை விடுவிக்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, இன்று மாலை அபிநந்தனை அட்டாரி – வாகா எல்லையில் ஒப்படைக்க ஏற்பாடுகள் நடந்தன.

அபிநந்தனை வரவேற்க ஏராளமான மக்கள் அப்பகுதியில் கூடினர். மேளதாளங்கள் முழங்க, தேசியக்கொடியை அசைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வண்ணம் இருந்தனர்.

ராவல் பிண்டியில் உள்ள பாகிஸ்தான் இராணுவத் தலைமையகத்தில் இருந்த அபிநந்தன் லாகூர் வரை விமானத்தில் அழைத்து வரப்பட்டார்.

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை வாகா எல்லைக்கு அழைத்து வந்து பாகிஸ்தான் இராணுவம் இந்திய அதிகாரிகளிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

இந்திய இராணுவ வீரர்கள் சூழ மிடுக்கான நடையுடன் இந்திய எல்லைக்குள் அடியெடுத்து வைத்தார் அபிநந்தன்.

பாகிஸ்தானில் இருந்து 75 மணி நேரத்துக்குப் பின் தாய் மண்ணில் கால் பதித்தார் விமானப்படை வீரர் அபிநந்தன்.

இன்று மாலை 5.20 மணியளவில் இந்தியாவிடம் அபிநந்தன் ஒப்படைக்கப்படுவார் என்று பாகிஸ்தானால் கூறப்பட்ட நிலையில், அவரை ஒப்படைப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. இரவு 9.20 மணியளவிலேயே அவர் ஒப்படைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *