பொறுப்புக்கூறும் பொறிமுறைக்கு உயிர்கொடுங்கள்!

‘’ போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி நிவாரணம் கிடைத்தாகவேண்டும். மறப்போம், மன்னிப்போம் என்றெல்லாம் ‘சொல்வித்தை’க் காட்டி இனியும் காலத்தை இழுத்தடிக்காமல் பொறுப்புக்கூறும் பொறிமுறைக்கு அரசாங்கம் உயிர்கொடுக்க வேண்டும்.’’

இவ்வாறு  ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் எம்.பியுமான  வேலுகுமார் வலியுறுத்தினார்.

கம்பளையில் நடைபெற்ற அரசியல்  நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த வேலுகுமார் எம்.பியிடம், காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வடக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்விகளை எழுப்பினர்.

இவற்றுக்கு பதிலளிக்கையிலேயே வேலுகுமார் எம்.பி. மேற்கண்டவாறு வலியுறுத்தினார். இதுதொடர்பாக  அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘’ வலிந்துகாணாமல்  ஆக்கப்பட்ட தமது சொந்தங்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் அவர்களின் உறவினர்கள் தினமும் விழிநீர் வடிப்பதுடன், என்றாவது ஒருநாள்

திரும்பிவருவார்கள் என்ற நம்பிக்கையில்தான் வலிகளை சுமந்தப்படி வாழ்கின்றனர். இருந்தும் ஏக்கத்துடன் முடியும் பொழுதுகள் ஏமாற்றத்துடனேயே விடிகின்றன.

தனது தந்தையின் வருகைக்காக காத்திருக்கும் பிள்ளைகளுக்கும், கொல்லிவைக்க மகன் வருவான் என ஏங்கித்தவிக்கும் பெற்றோருக்கும் அரசாங்கம்கூறும் பதில்தான் என்ன?

படையினரிடம் சரணடைந்தவர்கள், ஒப்படைக்கப்பட்டவர்கள், விசாரணைகளுக்காக அழைத்துசெல்லப்பட்டவர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல்ஆக்கப்பட்டுள்ளனர் என்று நல்லிணக்க  ஆணைக்குழு முன்னிலையிலும், பரணகம ஆணைக்குழு முன்னிலையிலும், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான  பணியகத்திடமும் மக்கள் சாட்சியங்களை வழங்கியுள்ளனர்.

உறவுகளை இழந்தவர்கள், தொலைத்தவர்களுக்குதான் அதன் வலி என்னவென்று புரியும்.  இவ்வாறு போரால் பாதிக்கப்பட்ட  மக்களின மன வலியை ‘மறப்போம்,  மன்னிப்போம்’ என்ற வார்த்தையால் மட்டுக் குணமாக்கிவிடமுடியாது. எதையும் மறக்கமுடியாது. மறக்கவும் கூடாது. மன்னிப்பு என்பது பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையை பொறுத்தவிடயமாகும்.

அதேவேளை, போரால் பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீர் துடைக்கப்படும், நிலையானதொரு நல்லிணக்கம் ஏற்படுத்தப்படும், பொறுப்புக்கூறும் கடப்பாடு நிறைவேற்றப்படும், தனக்கு வாக்களித்த தமிழ் மக்களை ஒருபோதும் கைவிடமாட்டேன் என அறிவிப்புகளை விடுத்த ஜனாதிபதி, இன்று அவை அனைத்தையும்  மறந்து செயற்படுகின்றார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கையால் வழங்கப்பட்ட இணைஅனுசரணை மீளப்பெறப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தான் நாட்டின் ஜனாதிபதி என்பதை மறந்து, கட்சி அரசியலையும், ஒரு தரப்பை திருப்திபடுத்தும் கொள்கையையுமே அவர் முன்னெடுத்துவருகின்றார்.

சர்வதேச சமூகத்தையும், அதுசார்ந்த அமைப்புகளையும் தொடர்ச்சியாக ஏமாற்றமுடியாது. அவ்வாறு ஏமாற்ற முற்பட்டால் அதன் விளைவுகள் படுபயங்கரமானவையாக இருக்கும். தாமதித்து வழங்கப்படும் நீதிகூட மறுக்கப்பட்ட நீதிக்கு சமனானதாகும். எனவே, இனியும் இழுத்தடிப்பு செய்யாமல், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *