நினைவு நாளில் இலட்சக்கணக்கில் விலைபோன ஸ்ரீதேவியின் புடவை!

தமிழ்ப் படங்களில் அறிமுகமாகி இந்தி சினிமா வரை சென்று கலக்கியவர் ஸ்ரீதேவி.

இந்திய அளவில் முன்னணி நடிகையாக விளங்கிய ஸ்ரீதேவி இந்தி தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார்.

கடந்த ஆண்டு பெப்ரவரி 24 ஆம் திகதி ஸ்ரீதேவி துபாயில் உயிரிழந்தார். இதையொட்டி கடந்த பெப்ரவரி 14ஆம் திகதியன்று சென்னை சி.ஐ.டி. நகரில் உள்ள போனி கபூர் இல்லத்தில் ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் அஜித் குமார், அவரது மனைவி ஷாலினி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கடந்த 25ஆம் திகதி ஸ்ரீதேவியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி ஸ்ரீதேவியின் விருப்பமான புடவைகளில் ஒன்றான கோட்டா வகை புடவையை ஏலத்துக்கு விட்டு, அதில் கிடைக்கும் பணத்தைத் தொண்டு நிறுவனத்துக்கு வழங்க ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரும், அவரது குடும்பத்தினரும் முடிவு செய்திருந்தனர்.

இந்த ஏலத்தை நடத்து வதற்கு பரிசேரா இணைய தளத்தை ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் தேர்வு செய்தனர்.

ஏலத்தில் புடவைக்கு ஆரம்ப விலையாக ரூ.40,000 நிர்ணயிக்கப்பட்டது.

இந்தப் புடவைக்கு அதிகபட்சமாக ஒன்றரை இலட்சம் ரூபா விலை கேட்கப்பட்டது. இந்த விலையே இறுதி செய்யப்பட்டு விட்டதாக இணையதளம் தெரிவித்துள்ளது.

இந்த ஏலத்தில் கிடைக்கும் பணத்தை ‘கன்சர்ன் இந்தியா பவுண்டே‌ஷன்’ என்ற தொண்டு நிறுவனத்துக்கு வழங்க ஸ்ரீதேவி குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

பெண்கள், குழந்தைகள், முதியோர், ஏழைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக இந்தப் பணம் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *