பாகிஸ்தான் பதிலடி! சுட்டு வீழ்த்தப்பட்டன 2 இந்திய போர் விமானங்கள்!! – ஒரு விமானி சிறைப்பிடிப்பு

பதிலடி நடவடிக்கையாக 2 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும் விமானி ஒருவரைக் கைதுசெய்ததாகவும் பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

புல்வாமா தக்குதலுக்குப் பழிக்கு பழிவாங்க இந்திய இராணுவத்தினர், பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 3.30 மணிக்கு, 100 சதவீதம் துல்லியமான தாக்குதலுக்குப் பெயர் பெற்ற இந்திய விமானப்படையின் ‘மிராஜ்-2000’ ரக போர் விமானங்கள் 12, சக்திவாய்ந்ததும், ஆயிரம் கிலோ எடையுடையதுமான லேசர் வழிகாட்டும் குண்டுகளை சுமந்து கொண்டு பாகிஸ்தானுக்கு பறந்தன.

அவை அங்கு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம், தளம் அமைந்துள்ள பாலகோட், முசாபராபாத், சகோதி ஆகிய இடங்களில் மிகத்துல்லியமாகக் குண்டுமழை பொழிந்தன. இதில், பயங்கரவாத முகாம்களும், தளமும் இருந்த இடம் தெரியாமல் நிர்மூலம் ஆகின.

21 நிமிடம் நடந்த இந்தத் தாக்குதலின்போது, அந்த முகாம்களில் அதிகாலை நேரம் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பயங்கரவாதிகள் சுமார் 350 பேர் கொல்லப்பட்டனர் என்று இந்திய இராணுவத்தினர் அறிவித்தனர். அவர்களில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவனான மசூத் அசாரின் மைத்துனர் மவுலானா யூசுப் அசாரும் ஒருவர் எனக் கூறப்படுகின்றது.

புல்வாமா தாக்குதல் நடந்து 12ஆவது நாளில், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை இந்தியா பழி தீர்த்தது.

இதற்குப் பழிவாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் அறிவித்தனர்.

அதன் தொடர்ச்சியாக இந்திய எல்லைக்குள் ரஜவுரி பகுதிக்குள் புகுந்து குண்டு வீசிய 2 பாகிஸ்தான் விமானங்கள் விரட்டி அடிக்கப்பட்டன எனவும், ஒரு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது எனவும், எல்லையில் அத்துமீறியதாக சுட்டுவீழ்த்தப்பட்ட பாக்.கின் போர் விமானத்தின் விமானி பரசூட் மூலம் தப்பினார் எனவும், விமானியின் நிலை குறித்து தெரியவில்லை எனவும் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“பாகிஸ்தான் வான்வெளியில் இருந்து எல்லைப் கட்டுபாட்டு பகுதியை கடந்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த நடவடிக்கையின் முழு நோக்கம் எங்கள் உரிமை, விருப்பம் மற்றும் சுய பாதுகாப்புக்கான திறனை நிரூபிப்பதாகும். நாங்கள் இதனை தீவிரப்படுத்த விரும்பவில்லை, ஆனால், முழுமையாக எதற்கும் தயாராக உள்ளோம்” எனக் கூறியுள்ளது.

இது தொடர்பில் பாகிஸ்தான் மேஜர் ஜெனரல் ஆசிப் காபூர், இயக்குனர் பொது (DG) இன்டர்-சர்வீஸ் மக்கள் தொடர்பு அதிகாரி கூறியுள்ளதாவது:-

“பாகிஸ்தான் வான்வெளிக்குள் இரண்டு இந்திய விமானங்கள் பாகிஸ்தான் விமானப் படையால் சுட்டு வீழ்த்தப்பட்டன. ஆசாத் ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் ஒன்றும், இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஒன்றும் விழுந்துள்ளது. ஒரு இந்தியா விமானப்படை விமானி உயிரிழந்துள்ளார். மற்றொரு விமானி காயங்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்” – என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *