மனித உரிமையை நிலைநாட்டுவதில் நாங்கள் உறுதியுடனேயே உள்ளோம்! – ஜெனிவா ஆரம்ப அமர்வில் ஐ.நா. பொதுச் செயலர் உரை

“உலகின் பல பகுதிகளில் மனித உரிமை விடயங்கள் வீழ்ச்சி கண்டுள்ளபோதும், மனித உரிமையை நிலைநாட்டும் விடயத்தில் நான் நம்பிக்கை இழக்கவில்லை.”

– இவ்வாறு ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமை பேரவையின் 40ஆவது அமர்வு ஜெனிவாவில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமாகியது. இதில் ஆரம்ப உரையை நிகழ்த்தியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“நெருக்கடிகளைத் தடுத்து, பதற்றங்களைத் தணித்து, நிலையான அபிவிருத்தி மற்றும் சமாதானத்தை ஏற்படுத்த மனித உரிமையே வழிவகுக்கின்றது.

மனித உரிமையை நிலைநாட்ட நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளபோதும், அதனைப் பாதுகாக்கவும் சமூக நீதிக்காகவும் வலிமையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

குடியேற்றவாசிகள் தமது உரிமை தொடர்பில் இன்று உரக்கப் பேசும் நிலை ஏற்பட்டுள்ளமை, ஊடகவியலாளர்கள் அச்சமின்றி பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளமை மற்றும் பெருமளவான நாடுகள் மரண தண்டனையை அமுல்படுத்தாமல் உள்ளமை என்பன சிறந்த விடயங்கள்.

அத்தோடு, பெண்கள் சுயாதீனமாகச் செயற்படும் நிலை, வறுமை நிலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை வரவேற்புக்குரியது.

எனினும், மனித உரிமை விடயங்களில் சில சவால்கள் காணப்படுவது குறித்து கரிசனை கொண்டுள்ளோம்.

பிரிக்க முடியாத மற்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட சிவில், அரசியல், சமூக மற்றும் கலாசார உரிமை தொடர்பில் கவனஞ்செலுத்துவது அவசியம்.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பேச்சுச் சுதந்திரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தப்படுகின்றது.

கடந்த மூன்று வருட காலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டு மாத்திரம் சுற்றுச் சூழலியலாளர்கள் நால்வர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், அவ்வாறானவர்களைப் பாதுகாப்பதற்குக் கூடுதல் நடவடிக்கை எடுப்பதோடு பொறுப்புக்கூறுதல் அவசியம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *