எல்லையைத் தாண்ட முயற்சித்த இந்திய விமானங்களுக்குத் தக்க பதிலடி கொடுத்து விரட்டினோம்! – பாகிஸ்தான் இராணுவம் கூறுகின்றது

இந்திய விமானப்படை, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கான எல்லைப் பகுதியை (லயின் ஆஃப் கண்ட்ரோல்) கடக்க முயன்றதாக பாகிஸ்தான் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

“இந்திய விமானப் படை எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியை இன்று அதிகாலை கடக்க முயன்றது. ஆனால், பாகிஸ்தான் துரிதமாகச் செயற்பட்டுவிட்டது” என்று பாகிஸ்தான் இராணுவ செய்தித்தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.

“இந்திய விமானப்படை முசாஃபராபாத் பகுதியில் இருந்து ஊடுருவ முயன்றது. ஆனால், பாகிஸ்தான் வெடிகுண்டுகளை வீசி தக்க பதிலடி கொடுத்து இந்திய விமானப் படையைத் திருப்பி அனுப்பியது” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் இராணுவம், இந்திய விமானப்படை விமானங்களைத் துரிதமாக தாக்கியதில் தப்ப முயன்ற இந்திய விமானப் படை விமானங்கள், பாலகோட் பகுதியில் விழுந்தன என அவர் ருவிட்டரில் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

இதில் எந்தவித உயிரிழப்புகளும் சேதங்களும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பஞ்சாபின் அம்பாலாவில் இருந்து இன்று அதிகாலை சர்வதேச எல்லையைத் தாண்டாமல் இலக்குகளை நோக்கி போர் விமானங்கள் சில புறப்பட்டன.

மொத்தம் முப்பது நிமிடங்கள் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அனைத்து விமானங்களும் பாதுகாப்பாகத் திரும்பி வந்தன.

சுமார் அதிகாலை மூன்றிலிருந்து மூன்றரை மணி வரை இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருதரப்புகளிலும் தாக்குதல் நடவடிக்கைகளுக்குத் தயார் நிலையில் இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆணை வரும் வரை பாதுகாப்பு எச்சரிக்கை அதிகளவில் விடப்பட்டுள்ளது” என்று இந்திய விமானப்படையைச் சேர்ந்தவர்கள் சிலர் பி.பி.சியிடம் தெரிவித்துள்ளனர்.

இந்திய விமானப் படை விமானிகளின் தைரியத்துக்குத் தலை வணங்குகின்றேன் என டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ‘ருவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதல்

இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரின் புல்வாமாவில், கடந்த 14ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் பலியானார்கள்.

பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயற்படும் ஜெய்ஷ்-இ- முகமது இயக்கம் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது.

ஆனால், பாகிஸ்தான் அதனைத் தொடர்ந்து மறுத்து வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *