கிளிநொச்சி நகரில் திரண்டது தமிழினம்! – சர்வதேச சமூகத்தினரிடம் நீதி வேண்டி உறவுகள் கதறல்; விண்ணதிரக் கோஷம்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி வடக்கு மாகாணம் முழுவதும் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியும் நடைபெற்றது.
 
கடந்த 20.02.2017 அன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் இரண்டு வருடங்களைக் கடந்தும் எவ்வித தீர்வும் எட்டப்படாது தொடர்ந்து வரும் நிலையில், இன்று மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
 
கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்பாக இன்று காலை 08.30 மணிக்கு ஒன்றுகூடிய வடக்கு, கிழக்கைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்பினர், யாழ். பல்கலைக்கழக சமூகத்தினர், தொழிற்சங்கத்தினர், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானவர்கள், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச சமூகத்தினரிடம் நீதி வேண்டி விண்ணதிரக் கோஷங்களை எழுப்பினர்.
 
“இராணுவத்தினராலும் ஒட்டுக்குழுக்களினாலும் கடத்தப்பட்ட எங்கள் உறவுகள் எங்கே?”, “காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது?”, “பொறுப்புக்கூறு பொறுப்புக்கூறு இலங்கை அரசே பொறுப்புக்கூறு”, “ஐ.நாவே மீண்டும் கால அவகாசம் இலங்கை அரசுக்கு வேண்டாம்”, “வேண்டாம் வேண்டாம் காணாமல்போனோரின் அலுவலம் வேண்டாம்”, “வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும்”, “போதும் இந்தச் சோதனை; நமக்கு ஏனிந்த வேதனை?”, “கண்ணீருடன்தான் நாங்கள் வாழ வேண்டுமா?”, “எங்கள் கண்ணீருக்கு முடிவேது? எங்கள் துயருக்குப் பதிலேது?”, “எங்கே எங்கே எங்கள் உறவுகள் எங்கே?”, “எத்தனை காலம்தான் நாம் தேடுவது உறவுகளை?”, “இன்னும் எத்தனை காலம்தான் காத்திருப்பது நாம்?”, “இன்னும் எத்தனை தடவை ஏமாற்றுவீர் எம்மை?”, “போதும் போதும் ஏமாற்று நாடகங்கள் போதும்”, “இனியும் நாங்கள் ஏமாளிகள் அல்லர்”, “இரண்டு வருடங்கள் வீதியில் நாம் போராட்டம்; நீதி, தீர்வு உடன் வேண்டும்” போன்ற கோஷங்களை எழுப்பியவாறும் பதாகைகளையும் ஏந்தியவாறும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இதில் கலந்துகொண்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோஷங்களை எழுப்பியதுடன் கண்ணீர்விட்டும் கதறி அழுதனர். உறவுகளைத் தொலைத்த அவர்களின் வலி – வேதனை போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் மனம் நெகிழ வைத்தது.
 
கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்பாகக் கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்த போராட்டக்காரர்கள், அங்கிருந்து டிப்போச் சந்திவரை பேரணியாகச் சென்று அங்கு அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கிளை அலுவலகத்தில் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கையளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *