நாட்டைக் காட்டிக்கொடுக்கவில்லை; உண்மை கண்டறியப்பட வேண்டும்! – ஐ.நா. தீர்மானத்தை மதிக்குமாறு மைத்திரிக்கு மங்கள தக்க பதிலடி

“ஆட்சியில் இருப்பவர்கள் எவரும் நாட்டைக் காட்டிக்கொடுக்க மாட்டார்கள். ஆனால், நடந்த உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் உள்ளக்கிடக்கைகளையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்.”

– இவ்வாறு முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் இந்நாள் நிதி அமைச்சருமான மங்கள சமரவீர தெரிவித்தார்.

‘இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த சிலர் முயற்சிக்கின்றனர். இராணுவத்தினர் மீது வீண்பழியைச் சுமத்துகின்றார்கள். சில வெளிநாடுகள் எமது நாட்டின் உள்விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிடுகின்றன. இதற்கு இங்கிருப்பர்வர்களும் உடந்தையாக உள்ளனர். நாட்டைக் காட்டிக் கொடுக்கும் இவர்களுக்கு வரலாறு தக்க பாடம் புகட்டும்’ என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்துத் தெரிவித்திருந்தார். அத்துடன் இராணுவத்தினர் போர்க்குற்றம் புரிந்திருந்தாலும் அவர்களைத் தண்டிக்கவிடமாட்டேன் என்றும் கூறியிருந்தார்.

இது தொடர்பில், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை இணை அனுசரணை வழங்கி தீர்மானம் நிறைவேற்றிய 2015ஆம் ஆண்டு காலப் பகுதியில் வெளிவிவகார அமைச்சராகச் செயற்பட்டு அதனை நெறிப்படுத்திய மங்கள சமரவீரவிடம் கேட்டபோது, அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“போர்க்காலத்தின்போது இரு தரப்பினரும் (படையினர், புலிகள்) குற்றம் இழைத்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டுப் பரவலாக உள்ளது.

அதன் அடிப்படையில்தான் அந்தக் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல விடயங்களை உள்ளடக்கி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை மீது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நாட்டின் நலன் கருதி இந்தத் தீர்மானங்களுக்கு அரசு இணை அனுசரணை வழங்கியது. இந்தத் தீர்மானத்தின் பரிந்துரைகளை நாம் மதித்துச் செயற்பட வேண்டும். அதனைத் தூக்கிவீச முடியாது.

போரின்போது குற்றங்கள் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது இரண்டாவது விடயம்.

முதலில் சர்வதேச சமூகத்தின் கோரிக்கைகளுக்கும் ஐ.நா. தீர்மானங்களுக்கும் நாம் மதிப்பளித்துச் செயற்பட வேண்டும்.

அதில் உள்ள பல பரிந்துரைகளை நாம் நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

ஏனைய பரிந்துரைகள் தொடர்பிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *