தென்னாபிரிக்காவை சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்தது இலங்கை அணி!

தென்னாபிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை வெற்றி கொண்ட முதல் ஆசிய அணியாக இலங்கை வரலாற்றுச் தனை படைத்துள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியை இலங்கை அணி 8 விக்கெட்டுக்களால் வென்றது.

இதன் மூலம் தென்னாபிரிக்காவை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் வீழ்த்திய மூன்றாவது அணியாகவும் இலங்கை அணி வரலாற்றில் இணைந்தது.

ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்து அணியும் ஏற்கனவே இந்தச் சிறப்பைப் பெற்றுள்ளன.

தென்னாபிரிக்காவின் போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடைபெற்ற 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 61.2 ஓவரில் 222 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதனையடுத்து போட்டியின் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 154 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

இரண்டாவது இன்னிங்சில் தென்னாபிரிக்க அணி 128 ஓட்டங்களைப் பெற்று அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 02 விக்கட் இழப்பில் 197 ஓட்டங்களைப் பெற்று 08 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

ஓசத பெர்னாண்டோ 75 ஓட்டங்களையும் குசல் மென்டிஸ் 83 ஓட்டங்களையும் பெற்று வெற்றியை உறுதி செய்தனர்.

இதன்போது இவர்கள் வீழ்த்தப்படாத மூன்றாம் விக்கெட்டுக்காக 148 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

இந்த வெற்றியின் மூலம் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி கைப்பற்றியது.

போட்டியின் ஆட்டநாயகனாக குசல் மென்டிஸும், தொடர் நாயகனாக குசல் பெரேராவும் தெரிவாகினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *